திருமயம் : திருமயம் அருகே மலைஅடி பள்ளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பொன்னமராவதி பகுதிகளில் பெரும்பாலும் விவசாயத்திற்கு பின்னர் நீர் நிலைகளில் நீர் வற்றிய பிறகு மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக நேற்று திருமயம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் உள்ள மலையடி பள்ளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக மீன்பிடித் திருவிழா நடைபெறுவது குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அறிந்த ஆர்வமுள்ள மீன்பிடிப்பவர்கள் நேற்று காலை அம்மாபட்டியில் உள்ள சம்பந்தப்பட்ட மலை அடிபள்ளத்தில் ஊத்தா, வலைகளுடன் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து மீன் பிடிப்பவர்களிடம் தலா ரூ. 100 நுழைவு கட்டணமாக பெற்றுக்கொண்டு சரியாக காலை 8 மணி அளவில் மலையடிப்பள்ளத்தில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர்.
மலையடிப்பள்ளம் சிறிய அளவில் இருந்ததால் குறைந்த அளவிலான மீன்பிடிப்பவர்களே பங்கு பெற்றனர். வலையில் ஜிலேபி, குறவை, கெளுத்தி, விரால், கட்லா உள்ளிட்ட மீன் வகைகள் அகப்பட்டன. இருந்த போதிலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஓரளவுக்கு மீன் அகப்பட்டதால் மீன் பிடித் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.