திருமங்கலம் : திருமங்கலத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை, தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக இந்த பகுதிகளில் சர்வீஸ்ரோடு மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் திருமங்கலம் – கொல்லம் நான்குவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் சாலையோர விவசாய கிணறுகள் அமைந்துள்ளன.
எந்தவித தடுப்பு வேலிகளும் இல்லாமல் சாலைகளிலிருந்து மிகக்குறைந்த இடைவெளியில் உள்ள விவசாயிகள் கிணறுகள் வாகனோட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி விலக்கு பகுதியில் நான்குவழிச்சாலை மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டு வரும் சர்வீஸ்ரோட்டிற்கு மிகவும் அருகில் மிகப்பெரிய விவசாய கிணறு அமைந்துள்ளது.
சாலையோரத்தில் மிகவும் ஆபத்தாக தரையோடு தரையாக இருக்கும் இந்த கிணறு பகுதியில் எந்தவித பாதுகாப்பு தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் இல்லை. எனவே அந்த வழியாக மின்னல் வேகத்தில் வரும் வாகனங்கள் சற்று நிலைதடுமாறினால் கிணற்றில் கவிழும் அபாயம் உள்ளதால் வாகனோட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.
எனவே தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் நான்குவழிச்சாலை பணிகளை மேற்கொள்ளும் போதே அருகேயுள்ள விவசாய கிணறுகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பதுடன், அதுகுறித்த எச்சரிக்கை பலகைகளையும் வைக்க முன்வரவேண்டும் என வாகனோட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.