திருமலை: திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் தனியார் ஓட்டல்கள் மற்றும் துரித உணவக உரிமையாளர்களுடன் கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யசவுத்ரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது வெங்கய்ய சவுத்ரி பேசுகையில், `திருமலைக்கு வரும் பக்தர்கள் சம்பிரதாய ஆடை அணிந்து வருவது போன்று உணவு முறையிலும் சில சம்பிரதாயங்களை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தேவஸ்தானம் வழங்கக்கூடிய அன்னபிரசாதம் சாப்பிடுகின்றனர். ஆனால் சிலர், தனியார் ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்களில் சாப்பிடுகின்றனர்.
அவ்வாறு சாப்பிடக்கூடிய பக்தர்களுக்கும் சம்பிரதாய முறைப்படி தயார் செய்யக்கூடிய உணவுகள் மட்டுமே வழங்கவேண்டும். இனி வருங்காலங்களில் சைனீஸ் உணவு பொருட்களை தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது. இதற்கு திருமலை முழுவதும் தடைவிதிக்கப்படுகிறது’ இவ்வாறு அவர் பேசினார். இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள், இனி, படிப்படியாக சைனீஸ் உணவு வகைகளை குறைத்துக்கொள்வதாக உறுதியளித்தனர். இதனிடையே பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடும் சைனீஸ் உணவு முறைக்கு கட்டுப்பாடு விதிப்பது ஏற்புடையதல்ல என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.