திருமலை: திருமலை அன்னபிரசாத கூடத்தில் நெரிசலில் சிக்கி சிறுவன் இறக்கவில்லை என சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுநாத் (15) என்ற சிறுவன். தனது பெற்றோருடன் கடந்த 22ம்தேதி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள அன்னபிரசாத கூடத்தில் உணவு சாப்பிட வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்ததாக கூறி அவரை திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய சவுத்ரி நேற்றிரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இறந்த சிறுவன் மஞ்சுநாத்துக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்துள்ளது. இதற்காக அவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார். கடந்த 22ம்தேதி மஞ்சுநாத் மற்றும் அவரது பெற்றோர் சுவாமி தரிசனம் செய்தபின்னர் அன்னபிரசாத கூடத்திற்கு வந்து வரிசையில் காத்திருந்தனர். நுழைவாயில் திறக்கப்பட்டதும் மஞ்சுநாத் வேகமாக அங்குள்ள காம்பளக்சில் ஓடி வந்துள்ளார். டைனிங் ஹால் பகுதிக்கு வந்து நின்ற அவருக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி காட்சியில் மிக தெளிவாக உள்ளது. அவர் வரும்போது எவ்வித கூட்ட நெரிசலும் இல்லை. கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழவும் இல்லை. பின்னர் அவரை மீட்டு சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்தார். எனவே பக்தர்களை குழப்பும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவு செய்ய வேண்டாம். பக்தர்களின் மனதை புண்படுத்த வேண்டாம். இவ்வாறு கூறினார். மேலும் அந்த சிறுவன் அன்னபிரசாத காம்பளக்சில் ஓடிச்சென்று மயங்கி விழுந்த சிசிடிவி காட்சியையும் தேவஸ்தானம் வெளியிட்டது.