Wednesday, November 29, 2023
Home » திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை!

திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை!

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை. ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து அறங்களைப் பற்றியும் பேசுகிறது திருக்குறள்.

எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்
பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் –
சொல்லால்
பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை

என்று திருவள்ளுவ மாலையில் உள்ள மதுரைத் தமிழ் நாகனாரின் வெண்பா குறிப்பிடுகிறது, எல்லாப் பொருளும் திருக்குறளில் உண்டு. அதில் இல்லாத பொருள் என்று ஒன்று இல்லவே இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறார் தமிழ் நாகனார். அப்படியிருக்க திருக்குறளில் `இல்லை’ என்ற சொல் இல்லாதிருக்குமா? திருக்குறள் பல்வேறிடங்களில் இல்லை என்ற சொல்லை எடுத்தாள்கிறது.

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

(குறள் எண் 32)

ஒருவனுக்கு அறத்தைவிட அதிகம் நன்மை தரக் கூடியது என்பது வேறு ஒன்று இல்லை. அந்த அறத்தை மறப்பதை விடக் கெடுதல் தரக் கூடியதும் வேறு ஒன்றும் இல்லை.

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

(குறள் எண் 59)

தம்முடைய புகழைக் காக்கும் மனைவியைப் பெறாதவர் தம்மைப் பழித்துக் கூறுவார் முன் ஆண்சிங்கத்தைப் போல் தலைநிமிர்ந்து நடக்கும் பெருமிதத்தைப் பெற மாட்டார்கள்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

(குறள் எண் 61)

ஒருவன் பெறத்தக்க செல்வம் அறிவுடைய பிள்ளைகளைப் பெறுதலே ஆகும், அதைவிடச் சிறந்த செல்வத்தை யாம் அறிந்ததில்லை.

இனைத்துணைத் தென்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

(குறள் எண் 87)

விருந்தினரை உபசரிப்பதும் ஒரு வேள்விதான். அதற்கு இணையானது வேறொன்று இல்லை, அதனால் வரும் நன்மையை அளவிட இயலாது. விருந்தினரின் தகுதி அளவே நன்மையின் அளவாகும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

(குறள் எண் 110)

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு. ஆனால் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வு என்பதே இல்லை

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கமிலான் கண் உயர்வு.

(குறள் எண் 135)

பொறாமை கொண்டவனிடம் செல்வம் சேர்வது என்பது இல்லை. அதுபோலவே ஒழுக்கமில்லாதவன் உயர்வடைவது என்பதும் இல்லை

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

(குறள் எண் 533)

மறதியால் சோர்ந்து நடப்போர்க்குப் புகழ் சேராது. இது உலகத்தில் நூலாசிரியர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்ட முடிவாகும்.

அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

(குறள் எண் 537)

மறதியில்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய இயலாத செயல் என்று எதுவும் இல்லை. இவ்விதம் இல்லை என்ற சொல்லை அழகுறப் பல்வேறு குறட்பாக்களில் எடுத்தாள்கிறார் வள்ளுவப் பெருந்தகை. மகாகவி பாரதிக்கு இல்லை என்று சொல்வது அறவே பிடிக்காது. வீட்டில் குண்டுமணி அரிசி கூட இருக்காது. ஆனால் வீட்டுக்கு நண்பர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள். பாரதிக்கு நண்பர்கள் ஏராளம் ஆயிற்றே? அரிசி இல்லை என்ற தகவலை பாரதியாருக்குத் தெரிவித்தால்தான் அவர் யார் மூலமாவது அரிசி வாங்கிவர ஏற்பாடு செய்ய முடியும், அரிசி இல்லை என்ற தகவலை நண்பர்கள் மத்தியில் இருக்கும் பாரதியாருக்கு எப்படித் தெரிவிப்பது? அது சங்கடம் தரும் செயல அல்லவா? பாரதியாரின் மனைவி செல்லம்மாவுக்கு அதுதான் பெரிய கவலை.

ஆனால், அதற்கும் சாமர்த்தியமாக ஒரு வழி சொல்லித் தந்திருக்கிறார் பாரதியார். `நீ திருமகள். உன் வாயிலிருந்து இல்லை என்ற சொல் வரலாமோ? அரிசி இல்லை என்று நேரடியாகச் சொல்லாமல் அகரம் இகரம் என்று சொல், நான் புரிந்துகொள்வேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

செல்லம்மா அகரம் இகரம் என்று சொன்னால் பாரதியார் புரிந்துகொண்டு சிரித்தவாறே ஒரு நண்பரை எங்காவது அனுப்பி அரிசி வாங்கிவரச் செய்துவிடுவார். இந்தச் செய்தி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றில் வருகிறது. முன்பெல்லாம் மளிகைக் கடைக்காரர்கள் இல்லை என்ற சொல்லை ஒருபோதும் பயன்படுத்த மாட்டார்கள். புளி இருக்கிறதா என்று கேட்டால் அது இல்லை என்று சொல்லமாட்டார்கள். உப்பு இருக்கிறது என்று பதில் சொல்வார்கள். அந்த பதிலிலிருந்துதான் புளி இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை என்பது அமங்கலச் சொல் என்று அன்றைய மளிகைக் கடைக்காரர்கள் கருதியதே அதற்குக் காரணம். கம்பராமாயணத்தில் அயோத்தியில் என்னென்ன இல்லை என்பது குறித்து ஓர் அழகான பட்டியலே தருகிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர், அயோத்தி நகரின் வளம் பேச வந்த கம்பர்,

“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லைபொய் யுரை இலாமையால்
வெண்மை இல்லைபல் கேள்விமே வலால்” 21

– என்று பாடுகிறார்.

வள்ளல்கள் அயோத்தியில் இல்லை, ஏனெனில் வறுமையினால் வாடுவோர் இருந்தால் தானே வள்ளல்கள் இருப்பார்கள்? ஏழை என்று எவரும் அங்கில்லை. மக்கள் எவருமே அங்கு வீரர்கள் இல்லை; ஏனெனில் எதிர்த்துப் போரிடு வோர் எவரும் இல்லை. உண்மை என்ற சொல்லே இல்லை; ஏனெனில் பொய்யுரைப்பவர் அங்கு இல்லை. பல நூல்களைக் கற்றுணர்ந்த சான்றோர்கள் அங்கிருந்தமையால் அறியாமை என்பதே அயோத்தியில் இல்லை என்று அயோத்தியின் புகழைப் பாடுகிறார் கம்பர்.

`இல்லை இல்லை இல்லையென்று இயம்பு
கின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றதொன்றை இல்லை
யென்ன லாகுமோ
இல்லையல்ல வொன்றுமல்ல இரண்டும்
ஒன்றிநின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது
இல்லையே.’

– என்பது சிவவாக்கியர் பாடல், கடவுளைப் பற்றிப் பேசும் பாடல் இது.

கடவுள் இல்லை, இல்லை என்று கூறுகின்றவர்கள், தனக்குள்ளேயே நானாக நின்ற ஆன்மாவையும், ஆன்மாவில் ஆண்டவனையும், அறியாமல் இல்லை என்று சொல்லல் சரியா? சக்தியாகவும், சிவனாகவும் இரண்டும் ஒன்றி நின்ற மெய்ப்பொருளை அறிந்து தியானித்து சும்மா இருக்கும் சமாதிநிலை என்ற எல்லையைக் கண்ட தவசீலர்கள், இறைவனுடன் இரண்டறக் கலப்பார்கள். அவர்கள் இனி இம்மாய உலகில் பிறப்பெடுக்க மாட்டார்கள். என்று உறுதிபட அறிவிக்கிறார் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர்.

`தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’

என்ற வரிகள் அவ்வையாரின் கொன்றை வேந்தனில் இடம்பெற்றுப் பெரும்புகழ்பெற்று மக்கள் மனத்தில் நிலைத்துவிட்டன. தாயும் தந்தையும் இணைபிரியாதவர்கள். அதுபோலவே கோயிலும் மந்திரமும் இணை பிரியாதது. இணைபிரியாத உறவுக்கு இணைபிரியாதவற்றையே உவமையாக்கிய அவ்வையாரின் பேராற்றலை எப்படிப் புகழ்வது?

`தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’

– என்ற திரைப்பாடல் அவ்வையாரின் அழகிய வரிகளை அடிப்படையாகக் கொண்டு பூவை செங்குட்டுவனால் எழுதப்பட்டு டி.கே.கலா குரலில் `அகத்தியர்’ திரைப்படத்தில் ஒலித்தது.

இராமலிங்க வள்ளலார் சென்னை கந்தகோட்டத்து முருகப் பெருமானைப் பற்றிப் பாடிய தெய்வ மணிமாலையில் ஒரு பாடலில்தான் எத்தனை எத்தனை இல்லைகள் இடம்பெற்று நம் நெஞ்சை நெகிழச் செய்கின்றன! வள்ளல்பெருமானின் பக்தித் தமிழின் குழைவு நம்மை மெய்ம்மறக்கச் செய்கிறது.

`உளமெனது வசநின்றதில்லை யென்
தொல்லைவினை
ஒல்லை விட்டிடவுமில்லை
உன்பதத்து அன்பில்லை என்றனுக்கு
உற்றதுணை
உனையன்றி வேறுமில்லை

இளையன் அவனுக்கு அருளவேண்டும் என்று
உன்பால்
இசைக்கின்ற பேரும் இல்லைஞ்..
ஏழை அவனுக்கு அருள்வதேன் என்று உன்
எதிர் நின்று
இயம்புகின்றோரும் இல்லை
வளமருவும் உனது திருவருள் குறைவது
இல்லைமேல்
மற்றெரு வழக்கும் இல்லை

வந்து இரப்போர்க்கு இல்லை என்பதில்லை நீ
வன்மனத்தவனும் அல்லை
தளர்விலாச் சென்னையில் கந்தகோட்டத்
துள்வளர்
தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவை
மணி
சண்முகத் தெய்வமணியே’
தனக்குக் கடவுள் அருளால் செல்வம் கிடைத்தால் இல்லை என்ற கொடுமையே உலகில் இல்லாமல் செய்வேன் என மகாகவி பாரதியார் தம்முடைய ஒரு கவிதையில் சூளுரைக்கிறார்.
செல்வம் எட்டும் எய்தி-நின்னாற்
செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை-உலகில்
இல்லையாக வைப்பேன்…

இல்லை என்பதே உலகில் இல்லாதிருக்க வேண்டும் என்பது மகாகவி பாரதியின் மாபெருங்கனவு. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சீறியவர் அல்லவா அவர்? கவியோகி சுத்தானந்த பாரதியார் பற்பல பக்திப் பாடல்கள் எழுதியுள்ளார். அவரின் புகழ்பெற்ற பாடல் ஒன்று, இல்லை என்ற சொல்லில்தான் தொடங்குகிறது.

‘இல்லை என்பான் யாரடா – என் அப்பனைத்
தில்லையிலே சென்று பாரடா!’

என்ற பாடல் இசைத்தட்டுக்களில் இடம்பெற்று அவரது மற்ற பாடல்களை விடக் கூடுதல் புகழடைந்தது. மூதறிஞர் ராஜாஜி,

`குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய்
கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும்
எனக்குக்குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’

என்று திருமலையில் கோயில் கொண்டிருக்கும் கோவிந்தனைப் பாடிப் பரவினார். அந்தப் பாடல், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வீகத் தேன் குரலில் ஒலித்துக் காலத்தை வென்றுவிட்டது. “திருவிளையாடல்’’ திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி டி.ஆர்.மகாலிங்கம் பாடியுள்ள பாடல் `இல்லாததொன்றில்லை என்றே’’ தொடங்குகிறது.

`இல்லாததொன்றில்லை..

எல்லாமும் நீ என்று சொல்லாமல்
சொல்லி வைத்தாய்
புல்லாகி பூண்டாகி
புழுவாகி மரமாகி புவியாகி
வாழ வைத்தாய்
சொல்லாலும் மனதாலும்
சுடர் கொண்டு தொழுவோரை
மென்மேலும் உயர வைத்தாய்

கல்லான உருவமும்
கனிவான உள்ளமும்
வடிவான சதுர்வேதனே
கருணை பொழி மதுரையில்
தமிழ் உலகம் வாழவே
கண் கொண்ட சிவநாதனே’

இவ்விதம் பழைய இலக்கியங்களிலிருந்து இன்றைய திரைப்பாடல்கள் வரை இல்லை என்ற சொல் பல்வேறு இடங்களில் பொருத்தமாக ஆளப்பட்டிருக்கிறது. திருக்குறளில் எல்லாம் இடம்பெற்றிருக்கிறது என்றாலும் உண்மையிலேயே நாம் எதிர்பார்க்கும் ஒரு சொல் இடம்பெறவில்லை என்றால் வியப்பாய் இருக்கிறதல்லவா? அந்தச் சொல் எது தெரியுமா? தமிழ் என்ற சொல்தான் அது. தமிழின் கௌரவத்தை உலக அளவில் உயர்த்தும் திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இல்லை.

அதற்கான காரணம் என்னவாக இருக்கும்? இந்நூல் தமிழ்பேசும் தமிழர்களுக்கானது மட்டுமல்ல, உலகின் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஆனது என்பதால் தமிழ் என்ற சொல் இடம்பெறவில்லையோ? உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதற்கும் வெளிச்சம் தரும் தன்னிகரில்லாத கைவிளக்காகவும் பயன்படுகிறது திருக்குறள், அது கற்றுத்தரும் நெறியில் வாழ்ந்தால் வாழ்க்கையில் துன்பம் என்பதே இல்லை.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?