சென்னை: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகத்தை நடத்த கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேக நேரத்தை நண்பகல் முகூர்த்த நேரமான 12:05 மணி முதல் 12:45 மணி வரை மாற்ற வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சிவராம சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் ஏற்கனவே இதே கோரிக்கை கொண்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. எனவே இதுபோன்ற நிலையில் நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பது மட்டுமில்லாமல், இதில் தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இந்த வழக்கின் மனுவை மறுபரிசீலனை செய்யவும் முடியாது’ என்று திட்டவட்டமாக தெரிவித்து, திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.