தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளபுரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் மற்றும் ரபி தம்பதியினருக்கு ஒன்றரை வயது ஹரிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. முத்துராஜ் திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் பகுதிகளில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். வரும் 15ம் தேதி குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
இதற்காக முத்துராஜ் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு மாலை அணிவித்து கடந்த 3 நாட்களாக கோயிலில் தங்கி விரதம் இருந்து வருகிறார். இதனிடையே, கோயிலில் முத்துராஜ் தம்பதியினருடன் ஒரு பெண் பழகியுள்ளார். கடந்த 2 நாட்களாக முத்துராஜ் குடும்பத்தினருடன் பழகிய நிலையில், திருச்செந்தூர் கடற்கரைக்கு சென்று வருவோம் என்று கூறி குழந்தையை வாங்கி கொண்டு சென்றுள்ளார். கடற்கரை குளத்தில் ரபி குளித்துக் கொண்டிருந்த போது கரையில் குழந்தையை பார்த்துக்கொண்டிருந்த பெண் திடீரென மாயமானார்.
இதனால் பதற்றமடைந்த ரபி, சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். கன்னியாகுமரியைச் சேர்ந்த தம்பதியை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து திருச்செந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியிடம் நட்பாக பழகி கடற்கரையில் இருந்து குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.