திருச்செந்தூர்: திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கோயில் நகரமான திருச்செந்தூரில் நகரின் மையப்பகுதியான இரும்பு ஆர்ச் அருகே செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 1100 மாணவிகள் பயின்று வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவிகள், கடந்த கல்வியாண்டுகளில் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் அரசின் அனைத்து கல்வி திட்டங்களும் கிடைப்பதால், மாணவிகள் சேர்க்கை எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இப்பள்ளியில் சிசிடிவி காமிராவும் பொருத்தப்பட்டு உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அரசு பஸ்களிலும், உள்ளூரில் இருக்கும் மாணவிகள் நடந்தும், ஆட்டோ, சைக்கிள் அல்லது பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். காலை நேரத்தில் பீக் அவருக்கு முன்பாகவே பெரும்பாலானோர் வந்து விடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி முடிந்து மாணவிகள் வீட்டுக்கு செல்லும்போது பள்ளி முன்பு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மாணவிகளை அழைத்து செல்ல ஆட்டோக்களும், இருசக்கர வாகனத்தில் பெற்றோரும் காத்திருக்கும் நிலையில், அரசு பஸ்சை பிடிக்க மாணவிகளும் அவசரமாக செல்வதால் எந்த வாகனங்களும் இப்பகுதியில் இருந்து நகர முடியாத நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக பள்ளி முன்பு பல தரப்பட்ட வாகனங்களும் தாறுமாறாக நிறுத்தப்படுவதே போக்குவரத்து நெருக்கடி முக்கிய காரணமென சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இப்பகுதியில் பள்ளி முடியும் நேரத்தில் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல காத்திருக்கும்போது குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் நிறுத்துவதை தவிர்த்து சாலையோரத்தில் வரிசையாக வாகனங்களை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் மற்ற குழந்தைகள் நடந்து செல்வதற்கும் எளிதாக இருக்கும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
பேரிகார்டு தடுப்புகள்மாற்றியமைக்கப்படுமா?
திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொதுப்பணித்துறை அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், இ-சேவை மையம், மருத்துவ பரிசோதனை மையங்கள், வணிக வளாகங்கள் என அடுத்தடுத்து உள்ளன. இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாகர்கோவில் மார்க்கமாக வரும் பக்தர்கள் இறங்கி ஆட்டோவில் கோயிலுக்கு செல்கின்றனர். அவசர தேவைக்காக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் சேவை செய்திடும் ஆட்டோக்கள் செல்வதற்காக பேரிகார்டுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்புகளை கடந்து மாலை நேரத்தில் வாகனங்களும், நடந்து செல்லும் மாணவிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே ஆட்டோக்களை ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிறுத்தி அவை வந்து செல்வதற்கு தகுந்தவாறு தடுப்புகளை அமைத்தால் பள்ளி செல்வதற்கான பாதை நெருக்கடியில்லாமல் இருக்கும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.