திருச்செந்தூர் : அமாவாசை தினத்தையொட்டி 2வது நாளாக திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடல் சுமார் 80 அடிக்கு உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது.
இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர்.
இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.இதேபோல நேற்று முன்தினம் பகல் 11.30 மணி முதல் நேற்று காலை 9.09 மணி வரை அமாவாசை இருந்தது.
இதன் காரணமாக கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே நேற்று முன்தினம் காலை சுமார் 100 அடி தூரமும், 2வது நாளாக நேற்று சுமார் 80 அடியும் கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தது. கடல் அலை உள்வாங்குவதும், வெளியேறுமாக இருந்தபோதிலும் பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல கடலில் புனித நீராடியும், பாறைகள் மீது அமர்ந்து செல்பியும் எடுத்தனர்.