திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாக திருவிழா வசந்த விழாவாக கடந்த மே 31ம்தேதி தொடங்கி, 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் தினமும் கோயிலில் உச்சிகால தீபாராதனைக்கு பின்பு சுவாமி ஜெயந்திநாதர், கோயிலிலிருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபம் சேர்ந்தார்.
அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும் நடந்தது. விழாவின் 10ம் நாளான இன்று வைகாசி விசாக திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கோயிலிலிருந்து சண்முக விலாச மண்டபம் சேர்ந்தார். மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறும்.
பின்னர், மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் மகா தீபாராதனையாகி சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் இருப்பிடம் சேர்ந்து நிறைவுபெறுகிறது. விசாகத்தை முன்னிட்டு சில நாட்களாவே திருச்செந்தூருக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து, பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்ததால் கோயில் வளாகமே நிரம்பி வழிந்தது. குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலிருந்தே கடலில் புனித நீராடியதால் கடற்கரையில் அலைபோல் மக்கள் வெள்ளம் காணப்பட்டது.
காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் மற்றும் அங்கப்பிரதட்சணை மற்றும் அடிப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள், தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பஸ்கள், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள், வாகன நிறுத்தம், குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக பந்தல்கள், காவல் உதவி மையம், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புக்காக கடற்கரையில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டும், சிசிடிவி கேமரா கொண்டு திருக்கோயில் வளாகமே கண்காணிக்கப்பட்டது.
கூடுதலான போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜாண் தலைமையிலான போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.