Saturday, July 19, 2025
Home செய்திகள்Showinpage திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

by Lavanya

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (18.06.2025) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜுலை மாதம் 14 அன்று நடைபெறவுள்ள குடமுழுக்கு பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
அறுபடை வீடுகளில் முதல் வீடாக திகழும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 14 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற ஜுலை மாதம் 14 அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், இத்திருக்கோயிலின் குடமுழுக்கிற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தாலும் அனைவரும் குடமுழுக்கை பார்க்கின்ற வகையில் சுற்றிலும் திருக்கோயிலை சுற்றிலும் எல்இடி அமைத்தல், பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றைவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம்.

அந்த வகையில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் குடமுழுக்கு சீரோடும் சிறப்போடும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 3,117 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்திருக்கின்றன. அதில் 117 திருக்கோயில்கள் முருகன் திருக்கோயில்களாகும். பெருந்திட்ட வரைவு (மாஸ்டர் பிளான்) என்ற சொல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் கொண்டுவரப்பட்டு வரலாறு காணாத அளவிற்கு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு 400 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஜுலை மாதம் 7 அன்று குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது. அதற்கான பணிகளையும் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த குடமுழுக்கினை பிச்சை குருக்கள், ராஜா பட்டர், செல்வம் போன்ற அர்ச்சகர்கள் ஒருங்கிணைந்து சீரோடும் சிறப்புடன் நடத்துவதற்கு உறுதுணையாக உள்ளார்கள். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியிலே குடமுழுக்கு வெகு சிறப்பாக நடத்தப்பட்டு 98 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்றைய தினம் முதலமைச்சர் 86 கோடி ரூபாய் செலவில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பெருந்திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அதேபோல் சுவாமிமலையில் படியில் ஏறுவதற்கு பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மின்தூக்கி ஏற்பாடு செய்திருக்கின்றோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட மூத்த குடிமக்கள் 2000 நபர்களை அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் அரசு மானியத்தோடு அழைத்துச் சென்று இருக்கின்றோம். இந்த ஆண்டு மேலும் 2000 மூத்த குடிமக்களை கட்டணம் அழைத்துச் செல்ல உள்ளோம்.

அறுபடை வீடுகள் மற்றும் அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் திருக்கோயில்களுக்கு 1085 கோடி ரூபாய் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் கடவுள் முருகனுக்கு இந்த திராவிட மாடல் ஆட்சியில் பெருமை சேர்த்தது போல் எந்த ஆட்சியிலும் பெருமை சேர்க்கவில்லை என்பதற்கு முழு உதாரணமாக பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திகழ்கிறது. திருப்பரங்குன்றத்திற்கு கம்பிவட ஊர்தி ( ரோப் கார்) அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்குகு அரசு நிதி ஒதுக்கி இருக்கின்றது. ஆகவே, கூடிய விரைவில் ரோப் கார் அமைப்பதற்கான டெண்டர் கோரப்படும். இன்னார் இனியவர் என்று இல்லாமல் கோரிக்கைகள் எங்கிருந்து வரப் பெற்றாலும் அவற்றை நிறைவேற்றுகின்ற முதல்வராக திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் திகழ்கிறார். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பழனியிலே தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது.

தமிழிலே குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறிவித்ததோடு, தமிழிலே குடமுழுக்கை நடத்தி காட்டினோம். மருதமலை முருகனுக்கும் இதேபோல் தமிழிலே குடமுழுக்கு நடத்தினோம் இன்னார் சொல்லி தான் நாங்கள் நடத்த வேண்டும் என்பது அல்ல. பிச்சை குருக்கள், ராஜா பட்டர், செல்வம் போன்ற குருக்கள்கள், துறை செயலாளர், ஆணையர் என அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழிலே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கின்றோம். தானாக நடைபெறப் போகின்ற ஒன்றை நாங்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகை என்ற பிறகு தான் நடந்ததாக சிலர் கூறுவது தானாக கனிந்த கனியை எங்களுடைய மந்திர சொற்களால் தான் கனிந்தது என்று கூறுவது போல் இருக்கிறது. திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்பவர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவீதத்தை அர்ச்சகர்களுக்கே வழங்கியதோடு, 13 போற்றி புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்ட ஆட்சி இந்த ஆட்சியாகும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் நமது முதலமைச்சரின் கொள்கையாகும்.

ஆகவே திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பழனியில் நடத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை பொறுத்த அளவில் நாங்கள் எந்த அரசியல் கட்சியையும், அரசியல் சார்புடையவர்களையும் அழைக்கவில்லை. மதச்சார்புடைய எந்த விதமான அடையாளமும் நாங்கள் பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் அறநிலையத்துறையின் பணியாக மேற்கொண்டோம். மாநாட்டிற்கு வாகனத்தை ஏற்பாடு செய்கிறோம் வா, வா என்றும் எவரையும் அழைக்கவில்லை. நாங்கள் ரசீது புத்தகத்தை அடித்துக் கொண்டு எங்கும் பணத்தை வசூலிக்கவில்லை. எங்களின் செல்வாக்கை பயன்படுத்தி ரயிலில் இலவசமாக கட்டணம் இல்லாமல் அனுப்ப வேண்டும் என்று நாங்கள் உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

பழனி முருகன் மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்திட வடிவமைத்தோம். அதில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றார்கள். 17 நாடுகளிலிருந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றார்கள். முருகனுக்காக பிரத்யேகமாக 3டி கண்காட்சி அமைத்து இரண்டு நாட்கள் நடத்திட முடிவெடுத்து, பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பத்து நாட்கள் நடத்தினோம். லட்சோப லட்ச மக்கள் பங்கேற்றார்கள். எங்கும் அரசியல் வாடை இல்லை. இந்த மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள், ஆன்றோர் சான்றோர் பெருமக்கள், அடியார்கள், உண்மையான முருகர் பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். அது அரசின் சார்பில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட முதல்வரால் 10 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட மாநாடாகும். முழுக்க முழுக்க முருகர் பக்தர்கள் நடத்தப்பட்ட மாநாடு. மதுரையில் நடத்தப்படும் மாநாடு அரசியல் நோக்கத்தோடு அரசியலில் லாபம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற மாநாடு என்பதனை தயவு செய்து ஊடகத்துறையினர் இதைப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

அதையும் மாநாடு, இதையும் மாநாடு என்றால் பழனியிலே நடைபெற்ற மாநாட்டிற்கு என்ன பெயர் வைப்பது. ஆகவே எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தோடு செயல்படுகின்ற எங்களுடைய முதல்வர் , அந்தந்த மதத்தினர் அவர்களுடைய வழிபாட்டிற்கு அமைதியான சூழல் வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த வழியில் அமைதியாக வழிபாடு நடத்த வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். மதத்தால், இனத்தால், மொழியால், மக்களை பிளவுபடுத்த ஒரு போதும் இந்த மண்ணிலே திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதல்வர் இடம் தர மாட்டார். முருகர் பக்தர்களும் இதை நன்றாக உணர்ந்துள்ளார்கள் அதன் முடிவு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை கொண்டு வந்தோம். இதற்கு முன் 2 திருக்கோயில்களில்தான் இத்திட்டம் இருந்தது.

இப்படி அன்னதான பிரபுவாக திகழ்கின்ற நமது முதல்வர் பழனி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவினையும் வழங்கி வருகின்றார். அடுத்தாக அதே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் விடுதி மாணவர்களுக்கும் மூன்று வேளை கட்டணமில்லா உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் , திமுக கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது என பேசியது குறித்த கேட்டீர்கள். அவர்களுடைய கப்பலில் தான் ஓட்டை விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மாலுமி இல்லாத கப்பலாக திசை தெரியாத, கலங்கரை விளக்கே தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றவர்கள் அவர்கள்தான். உறுதியான எங்கள் கப்பலில் எந்த காலமும் ஓட்டை விழாது, எந்த சூழல் இருந்தாலும் கரைக்கு கொண்டு சேர்க்கின்ற உறுதிமிக்க முதல்வர் மாலுமியாக இருக்கின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கப்பல் எந்த புயலிலும், எந்த சூறாவளியிலும் சிக்காது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., இணை ஆணையர்கள் சி. மாரியப்பன், கிருஷ்ணன், துணை ஆணையர்கள் எம். சூரியநாராயணன், ஆர். பொன் சுவாமிநாதன், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப. சத்யபிரியா, அறங்காவலர்கள் நா. மணிச்செல்வம், தி.மு.பொம்மதேவன், வ.சண்முகசுந்தரம், தி. இராமையா, உதவி ஆணையர் து.வளர்மதி, மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் சுவிதா விமல், மாமன்ற உறுப்பினர்கள் உசிலை சிவா, சிவசக்தி ரமேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi