மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வரும் ஜூலை மாதம் 7-ம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கேரள பாரம்பரிய தாந்ரீக முறைபடி பூஜை நடைபெறுகிறது. எனவே கேரள முறைப்படி வல்லுநர் குழுகொண்டு ஆய்வு செய்து தற்போது நடைபெறும் திருப்பணிகள் அதன்படி நடைபெற்றுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அங்குள்ள 24 தீர்த்தங்கள் புதுப்பிக்க வேண்டும். குடமுழுக்கின் போது ஹெலிகாப்ட்டரில் வந்து மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது ஆகமத்திற்கு எதிரானது. ஏனெனில் குடமுழுக்கு நிறைவடைந்தது என்பதை குறிக்க கருடன் வனத்தில் வட்டமிடும். ஹெலிகாப்ட்டரை பயன்படுத்தினால் இது போன்ற நிக்ழ்வு நடைபெறாது. இது பக்தர்கள் மனதை பாதிக்கும். எனவே கேரள முறைப்படி திருப்பணிகள் நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து அதன்படி குடமுழுக்கை நடத்த உத்தரவிடவேண்டும். அதுவரை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஏற்கனவே அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. கடைசி நேரத்தில் மீண்டும் குழு அமைக்க வேண்டும் என கூறுவது ஏற்ப்படையதல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.