திருச்செந்தூர்: திருச்செந்தூர், பழநி கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை தரிசித்து விரதம் துவங்கினர்.அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கோயில் இணை ஆணையர் கார்த்திக் பூஜை நடத்துவதற்கான நிர்வாக அனுமதியை காப்பு கட்டிய சண்முகசுந்தரம் பட்டருக்கு வழங்கினார். தொடர்ந்து, யாகசாலையில் பூஜைகளாகி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மதியம் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டப்பட்டு யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கசப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கந்தசஷ்டி விழா தொடங்கியதை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் ஏராளமானோர் கடலில் புனிதநீராடி கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி கேரளா உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து விரதம் தொடங்கினர்.
பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் 21 இடங்களில் தற்காலிக கொட்டகைகள், கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று முதல் நவ.17ம் தேதி வரை கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது. நவ.18ம் தேதி திருவிழாவின் சிகரமான சூரசம்ஹாரம் மாலை 4 மணிக்கு கோயில் கடற்கரையில் நடக்கிறது.
பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 7 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா நேற்று பகல் 12 மணிக்கு காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
இதையொட்டி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் கல்ப பூஜை நடந்தது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசங்களை வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர், யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு உச்சிகாலத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.விழாவிற்காக பழநி கோயில் யானை கஸ்தூரி நேற்று மலைக்கோயிலுக்கு யானைப்பாதை வழியாக அழைத்து வரப்பட்டது.
அங்கு கஸ்தூரி யானைக்கும் காப்பு கட்டப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகாசூரன் மற்றும் சூரபத்மன் ஆகிய சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.19ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மலைக்கோயிலில் தனுர் லக்னத்தில் சண்முகர், வள்ளி – தெய்வானை திருக்கல்யாணமும், மாலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி – தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும்.