திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் இன்று காலை கடல் 50 அடி தூரம் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதி கடலானது அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய அல்லது பிந்தைய நாட்களில் உள்வாங்குவதும், வெளியேறுவதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் நாளை பவுர்ணமி என்பதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் திருச்செந்தூர் கோயில் பகுதியில் அய்யா வைகுண்டர் அவதாரபதி அருகே சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் பாசிப் படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இருந்தபோதிலும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம்போல் புனித நீராடினர். அப்போது பாறைகள் மேல் நின்று சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கோயில் புறக்காவல் நிலைய போலீசார் பக்தர்களை பாதுகாப்பாக நீராடுமாறு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனர்.
பக்தர்கள் கூட்டம்
தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் எப்போதும் திருவிழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும் தலமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அதிகாலை முதலே கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர். அதன்பிறகு இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.