Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தீர்த்தகிரி முருகர் கோயில் அடிவாரத்தில் இயங்கும் கல் குவாரியை தடை செய்ய வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு

வேலூர் : தீர்த்தகிரி முருகர் கோயில் அடிவாரத்தில் இயங்கும் கல் குவாரியை தடை செய்ய வேண்டும் என வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை தைத்தனர்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் டிஆர்ஓ மாலதி, ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

அதில், வேலூர் அடுத்த தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயில் அறக்கட்டளை மற்றும் பேங்க் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 250 ஆண்டு பழமை வாய்ந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பேங்க் நகரை சுற்றி 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தீர்த்தகிரி மலையடிவாரத்தில் இயங்கி வரும் கல் குவாரியால் இங்குள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில் தீர்த்தகிரி மலையடிவாரத்தில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்குவாரி பணி தற்போது மீண்டும் இயங்கி வருகிறது. குவாரியில் வெடிகள் வெடிக்கும்போது சிதறும் கற்கள் பக்தர்கள் மீதும், குடியிருப்பில் உள்ளவர்கள் மீதும் விழுகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைகின்றனர். எனவே, கல்குவாரியை முற்றிலும் தடை செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில், பாஜக மாவட்ட தலைவர் மனோகரன் மற்றும் பாஜகவினர் அளித்த மனுவில், சத்துவாச்சாரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் போதுமான கட்டிடங்கள் இல்லை.

இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தரவேண்டும் என பல ஆண்டுகளாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளையாட்டு மைதானம், கழிவறை இல்லை. எனவே ரங்காபுரத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் அரசு இடத்தில் தற்போது இங்கு இயங்கி வரும் அரசு பள்ளியை பெணகள் பள்ளியாக மாற்றிவிட்டு ரங்காபுரத்தில் புதிதாக ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

காட்பாடி அடுத்த எல்ஜி புதூர் கிராம மக்கள் இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் அளித்த மனுவில், எங்கள் ஊர் காட்பாடி-குடியாத்தம் சாலையில் உள்ளது. 250 ஆண்டுக்கும் மேலாக இங்குள்ள பொன்னியம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். பொதுமக்களும் இக்கோயிலில் வழிபாடு செய்து வருகின்றனர். ஆனால் தனி நபர் இந்த கோயில் அருகே வீட்டுமனைகள் அமைத்து விற்பனைக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வீட்டுமனைகளுக்கு செல்லும் வழியை, தனியாக ஏற்படுத்தாமல் நாங்கள் கோயிலுக்கு சென்று வரும் வழிப்பாதையில், அவர் அமைக்கும் வீட்டு மனைகளுக்கு செல்லும் வகையில் வழி ஏற்படுத்தியுள்ளார்.

அவ்வாறு ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் நாங்கள் கோயிலுக்கு செல்லவும், பொங்கல் வைத்து வழிபடவும் தடை ஏற்படும். இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள், போலீசில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோயில் பாதையை தனிநபரிடம் இருந்து மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

காட்பாடி அடுத்த பொன்னை ஊராட்சி பொதுமக்கள் அளித்த மனுவில், பொன்னை ஊராட்சி கணேஷ் நகரின் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகில் மருத்துவமனை, கால்நடை மருந்தகம், அங்கன்வாடி, தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளது. மதுக்கடை அருகே உள்ள குளத்தில் மது குடித்துவிட்டு காலி மதுபாட்டிலை குடிமகன்கள் அதில் வீசுகின்றனர். பொதுமக்கள், மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

போலி விளையாட்டு சங்கங்கள் மீது நடவடிக்கை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட குத்துச்சண்டை அசோசியேஷன் சங்க செயலாளர் ராஜேஷ் தலைமையில் அளித்த மனுவில், விளையாட்டு துறையில் உலகளவில் தமிழக வீரர்கள் பலர் பல்வேறு பதக்கங்கள் பெற்று வருகின்றனர்.

ஆனால் வடமாநிலங்களில் நடைமுறையில் உள்ள ‘சொசைட்டி’ பதிவுகளை கொண்டு பல்வேறு என்ஜிஓ அமைப்புகள், பல்வேறு பெயர்களில் போலியாக விளையாட்டு போட்டி நடத்தி வருகின்றனர். அதே பாணியில் வேலூரில் சிலர், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு அங்கீகாரம் பெற்ற இந்திய குத்துச்சண்டை கழகத்திடம் அனுமதி பெறாமல் போலியாக பதிவு பெயரில் இயங்கி வருகிறது.

அவர்கள் வரும் 22, 23, 24ம் தேதிகளில் வேலூர் நேதாஜி அரங்கில் பல ேபாட்டிகள் நடத்த உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முறைப்படி தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் மற்றும் வேலூர் மாவட்ட குத்துசண்டை அனுமதி பெறாத இந்த சங்கம், நுழைவு கட்டணமாக ₹500 பெற்று வருவதாக தகவல் வந்துள்ளது.

தகுதியற்ற போலி சான்றிதழ்கள், பரிசுகள் வழங்குவதாக தெரிவித்துள்ளது. அந்த சான்றிதழ் கொண்டு வருபவர்கள் அரசிடம் 3 சதவீத இட ஒதுக்கீடு ேகார முடியாது. எனவே, போலி சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அங்கீகாரமற்ற சங்கங்களின் போட்டிகளை வேலூர் மாவட்டத்தில் நடைபெறாமல் தடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மாட்டு வண்டிக்கு தனி மணல் குவாரி

உரிமைக்குரல் கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் மாநில நலச்சங்கம் சார்பில் அளித்த மனுவில், நாங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழை மாட்டுவண்டி தொழிலாளர்கள். மாட்டுவண்டி தொழில்தான் எங்களின் வாழ்வாதாரம். ஆனால் 3 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் மணல் குவாரி சம்பந்தமாக அனைத்து அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் வழி கிடைக்கவில்லை. எனவே தனி மணல் குவாரி அமைத்து, நாங்கள் மணல் எடுக்க அனுமதி வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.