திண்டிவனம்: திண்டிவனம் அருகே ரயில்வே தரைப்பாலத்தில் தண்டவாளங்களுக்கு இடையே உடைப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி உள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ரயில்வேதுறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.கேணிப்பட்டு பகுதியில் 133வது மைல் கல் பகுதியில் 400 எண் கொண்ட சிறிய ரயில்வே தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மேல் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே மத்தியில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி அதன் வழியே கருங்கல் ஜல்லிகள் பள்ளத்தின் வழியே கீழே இறங்கி உள்ளது. தற்போது மழை காலம் தொடங்கி உள்ளதால் அப்பகுதியில் பலத்த மழை பெய்யும்போது அதன் வழியே மழைநீர் மண்ணை அரித்துக் கொண்டு சென்றால் அப்பகுதியில் பெரிய அளவில் பள்ளம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இதனால் மண்ணரிப்பு மற்றும் ரயில்களின் வேகத்தால் ஏற்படும் அதிர்வால் அப்பகுதியில் செல்லும் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கும் அபாயமும் ஏற்படும். இதனால் அப்பகுதியை கடக்கும் ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இந்த ரயில் பாதை வழியாகத்தான் திருச்சிராப்பள்ளி-சென்னை மார்க்கமாக ரயில்கள் சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட ரயில்வேத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அப்பகுதியில் தோன்றியுள்ள திடீர் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அப்பகுதியில் குறைந்த வேகத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.