திண்டிவனம்: திண்டிவனத்தில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியுடன் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டிவனத்தில் உள்ள தீர்த்தக்குளம் பூந்தோட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு வசிப்பவர்கள் உரிய முறையில் அறநிலைய துறைக்கு வாடகை செலுத்தவில்லை என்றும் புகார் எழுந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இணை ஆணையர் சிவகரன் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் வந்தனர்.
அப்போது தகவலறிந்து அங்கு வந்த சட்ட பேரவை உறுப்பினர் அர்ஜுனன் உள்ளிட்ட அதிமுகவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிமுகவினர் அவகாசம் கேட்டதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதை அடுத்து வாடகை பணம் செலுத்துவதற்கு மட்டும் ஒரு வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.