வருசநாடு: ஆண்டிபட்டி அருகே, மயிலாடும்பாறை மலைப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரண மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மயிலாடும்பாறை அருகே உள்ள தாழையூத்து மலைப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு கிடந்தன. சாலிமரம், உசிலை மரம், தோதகத்தி உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. முதல்கட்டமாக மர்மகும்பல் இந்த மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வனத்துறையினர் அந்தப் பகுதியில் தீவிரமாக ஆய்வு செய்தபோது வனப்பகுதிக்குள் டிராக்டர் சென்று வரும் வகையில் பாதை அமைத்து மரங்களை வெட்டி கடத்திச் சென்றதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக கண்டமனூர் வனச்சரக அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மரங்களை வெட்டி கடத்திய மர்மகும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் சாலை உள்ளிட்ட அரசின் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் வனத்துறையினர் தடை விதித்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அடர் வனப்பகுதிக்குள் மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.