டெல்லி: திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 15 நாட்களில் 4 கிலோ எடை குறைந்துவிட்டதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது. அமலாக்கப்பிரிவின் 11 நாள் காவல் முடிந்து, திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட மார்ச் 21 முதல் தற்போது வரை அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் உள்ளார். திகார் சிறைக்கு அழைத்துவரப்பட்டபோது கெஜ்ரிவால் உடல் எடை 55 கிலோவாக இருந்தது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவால் உடல் எடை குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி வெளியிட்ட தகவலை திகார் சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டதில் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் எடை 4.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் அமைச்சருமான அதிஷி தெரிவித்துள்ளார். திகார் சிறையின் எண் 2-ல் உள்ள அறையில் கெஜ்ரிவால் வைக்கப்பட்டுள்ளார். முதல்வருக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்படுகிறது.
எனினும், முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து உடல் எடை குறையாமல் நலமாக இருப்பதாகவும். எந்தவொரு அவசரநிலைக்கும் அவரது அறைக்கு அருகில் விரைவான பதிலளிப்புக் குழுவையும் நிறுத்தியுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கெஜ்ரிவால் கடுமையான நீரிழிவு நோயாளி. உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், நாட்டிற்காக இரவு பகலாக உழைக்கிறார். கைது செய்யப்பட்டதில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் எடை 4.5 கிலோ குறைந்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. பாஜக அவரது உடல்நிலையை பணயம் வைக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நேர்ந்தால் நாடு மட்டுமல்ல, கடவுளும் மன்னிக்க மாட்டார்” என தெரிவித்துள்ளது.