ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட நாடுகாணி பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து விசாரித்து, அவர்களை சோதனை செய்தபோது புலியின் நகங்கள் மற்றும் பற்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்கள் மூவரையும் நாடுகாணி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் சுப்பிரமணியம், சிமியோன், பாலகிருஷ்ணன் என்பதும் விற்பனைக்காக புலியின் நகங்கள் மற்றும் பற்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்து பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் கைதானவர்களுக்கு நகம் மற்றும் பற்கள் எவ்வாறு கிடைத்தது என்பதும் குறித்தும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.