காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மக்கள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானின் எல்லைமீறிய ஆணவத்துக்கு உரிய பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. முதற்கட்டமாக சிந்து நதிநீர் பயன்பாட்டுக்கு தடை, எல்லைப்பகுதிகள் அடைப்பு, வான்வெளிமூடல், வர்த்தகத்திற்கு தடை என்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. ஆனால் பாகிஸ்தானின் அத்துமீறல் அடங்கவில்லை. இதன் காரணமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை கடந்த 7ம் தேதி இந்தியா தொடங்கியது.
இதனால் நிலைதடுமாறிய பாகிஸ்தான், ஒரு கட்டத்தில் போர் குறித்து பல்வேறு வதந்திகளை பரப்ப ஆரம்பித்தது. இதற்கும் உரிய ஆதாரங்களுடன் இந்தியா உரிய பதிலடி கொடுத்தது. இதற்கிடையில் கடந்த 10ம்ேததி மாலை, திடீர் திருப்பமாக போர்நிறுத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருநாடுகளும் வெளியிட்டது. ஆனாலும் பாகிஸ்தான் போர்நிறுத்த நிலைப்பாட்டில் முழுமையாக இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஒருபுறமிருக்க அமெரிக்காவின் தலையீடும், சீனா, துருக்கி போன்ற நாடுகளின் மறைமுக ஆதரவும் பாகிஸ்தானுக்கு இருப்பது வெட்டவௌிச்சமானது. இதனால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க சில ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்தியாவிற்கு அவசியமாகியுள்ளது.
இதை கவனத்தில் வைத்து இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்கிறது. குறிப்பாக போர் பதற்றம் ஓரளவு முடிவுக்கு வந்த பின்னரும் சிந்துநதி நீர்நிறுத்தம், எல்லைகள் மூடல், வர்த்தக உறவுகள் முடக்கம் போன்ற தடைகளை இந்தியா இதுவரை விலக்கிக் கொள்ளவில்லை. இது பாகிஸ்தானுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் வலுவான நிலைப்பாட்டை எடுக்கும் வரை சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை முடக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானில் நெருக்கடியை உருவாக்கும் என்று பாகிஸ்தான் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு, அரசியல் ஸ்திரத்தன்மையின்மை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட காரணங்களால், ஏற்கனவே பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் இருக்கிறது.
அதனால், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து பாகிஸ்தான் மக்கள் பரிதவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முழுவதும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் விலைவாசியும், வலுவிழந்து நிற்கும் பொருளாதாரமும் மேலும் அதிக நெருக்கடியை உருவாக்கும் என்கின்றனர் சர்வதேச பொருளியல் ஆய்வாளர்கள். இதனிடையே, சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு தனது முதல் உரையில், பிரதமர் நரேந்திர மோடி, அரசாங்கத்தின் சமரசமற்ற நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளார்.
‘‘தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார். பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் புலிவாலை பிடித்த கதையாக இப்போது பரிதவித்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான் என்பதே நிதர்சனம்.