மும்பை: ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட் கட்டணம் தொடர்பான விவகாரங்களை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் பிசிசிஐ-யிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களில் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் அக்.15ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அக்.15ஆம் தேதி நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் என்பதால், இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான தேதியை மாற்றம் செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மேலும் சில கிரிக்கெட் வாரியங்களும் தேதி மாற்றம் செய்வதற்காக கோரிக்கை வைத்துள்ளதாகவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டாலும், பின்னர் போட்டி நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நேரடி டிக்கெட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் டிக்கெட் மட்டும் வைத்திருந்தால் அனுமதியளிக்கப்படாது என்றும், கவுன்டரில் வாங்கியிருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் போட்டி நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் 40 டிக்கெட்டை வாங்குவதற்கும், 10 சதவிகித டிக்கெட்டுகளை ஐசிசி டூர் பார்ட்னர்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு உலகக்கோப்பை போட்டிக்கும் 300 டிக்கெட்டுகள் ஐசிசி மற்றும் பிசிசிஐ-க்கு வழங்கப்படும். அதேபோல் லீக் போட்டிகளுக்கு ஐசிசி நிர்வாகத்திற்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் தரப்பில் 1295 டிக்கெட்டுகளும், இந்திய அணி மற்றும் அரையிறுதி போட்டிகளுக்கு 1355 டிக்கெட்டுகளும் வழங்கப்படவுள்ளது.