சென்னை: இடி, மின்னல், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்டநேரம் வானில் வட்டமடித்தன. 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை 4 மணி வரையில், கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 4.30 மணிக்கு மேல் திடீரென வானில் கருமேகக் கூட்டம் திரண்டு பலத்த இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
பெங்களூருவில் இருந்து 140 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இந்தூரில் இருந்து 164 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் பாட்னா, டெல்லி, கொல்கத்தா, துர்காப்பூர், கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து வந்த 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது. அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ராஞ்சி, விசாகப்பட்டினம், திருச்சி, மும்பை, டெல்லி, கோவை, மதுரை, கோவா, அகமதாபாத், இலங்கை உள்ளிட்ட 12 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மழை தீவிரம் படிப்படியாக ஓய்ந்த நிலையில், அடுத்தடுத்து விமானங்கள் சென்னையில் தரையிறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாக அடுத்தடுத்து இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
* திருச்சி, பெங்களூருவில் 2 விமானம் தரையிறக்கம்
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கோவையில் இருந்து 157 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல், கொல்கத்தாவில் இருந்து 174 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும், சென்னையில் இருந்து திருச்சி மற்றும் கொல்கத்தா செல்ல வேண்டிய 2 விமானங்கள் வானிலை சீரானதும் சில மணி நேரங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
* விமானம் மீது லேசர் ஒளி அடித்ததால் பரபரப்பு
புனேயில் இருந்து 178 பயணிகளுடன் நேற்று அதிகாலை 1.10 மணியளவில் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க தாழ்வாக பறந்தது. அப்போது கிண்டி பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளிக்கதிர் விமானத்தை நோக்கி பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள், விமானத்தை வானில் பறக்கச் செய்தனர். விமானத்தின் மீது லேசர் அடிக்கப்படும் தகவலை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர். இதுகுறித்து விமான நிலைய காவல் நிலைய போலீசார் மற்றும் பாதுகாப்புத்துறையான ப்யூரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அலுவலக அதிகாரிகளுக்கு (பிசிஏஎஸ்) தகவல் தெரிவிக்கப்பட்டது. தரையிறங்க வந்த விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
அடுத்த சில வினாடிகளில் லேசர் லைட் ஒளி மறைந்த நிலையில், விமானம் பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 1.20 மணியளவில் தரையிறங்கியது. இதுதொடர்பாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், பரங்கிமலை, கிண்டி காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து விமானத்தின் மீது லேசர் லைட் அடித்த மர்ம நபர்களை பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக தரையிறங்க வந்த விமானத்தின் மீது லேசர் லைட் ஔி அடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.