ஸ்பெயின் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு 15 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலாவாக வந்தனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்ற குழுவினருக்கு தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மிகவும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஏழரைப்பட்டி கிராமத்திற்கு வந்த குழுவினர் அங்குள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்றனர். அவர்களில் ஸ்பெயின் நாட்டில் திருமணமான ஜோடி, விநாயகர் கோயிலில் தமிழ் கலாச்சாரப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவரும் தமிழர் பாரம்பரியமான வேட்டி, சேலை அணிந்து பிள்ளையார் முன்பாக மாலை, மோதிரம் மாற்றிக் கொண்டு, தமிழர் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களது உறவினர்களும் வேட்டி, சேலை அணிந்து முழுக்க, முழுக்க தமிழ் கலாச்சாரப்படி திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இத்திருமணம் கிராம மக்களே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமணம் முடிந்ததும் மணப்பெண் அங்குள்ள மூதாட்டியிடம் ஆசி பெற்றார். ஒட்டுமொத்த கிராமமும் ஸ்பெயின் நாட்டு தம்பதியை வாழ்த்தினர். தொடர்ந்து வாழை இலையில் சர்க்கரைபொங்கல் பரிமாறப்பட்டது. ஸ்பெயின் நாட்டினரின் திருமணம் சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.