திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருச்சூர் நெல்லங்கராவில் ரவுடிகளுக்கிடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸ் ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ தலைமையில் வந்த போலீசார் ரவுடிகளை கைது செய்தனர். தொல்லை கொடுத்து வந்த ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இங்குள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நெல்லங்கராவில் உள்ள ஒரு பகுதிக்கு ‘இளங்கோ நகர்’ என்று பெயர் சூட்டினர். இதுதொடர்பாக பெயர் பலகையும் வைக்கப்பட்டது.
ஆனால் இதுகுறித்து அறிந்த கமிஷனர் இளங்கோ, ‘‘நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். என்னுடைய பெயரை நீக்கிவிடுங்கள்’’ என அப்பகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பெயர் பலகையை அப்பகுதி மக்கள் அப்புறப்படுத்தினர். திருச்சூர் ரவுடிகளை தெறிக்கவிட்ட இளங்கோவின் சொந்த ஊர், தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் ஆகும். இவர் 2015ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இதுகுறித்து திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோவிடம் கேட்டபோது, ‘‘ மக்களுக்கு சேவை செய்வதுதான் அதிகாரிகளின் கடமை. பெயர், புகழுக்காக எதையும் செய்யக்கூடாது’’ என்றார்.