சென்னை: அடையாரில் உள்ள புதிய வீட்டிற்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்க ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இன்ஜினியரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை துரைப்பாக்கம் பழைய பல்லாவரம் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் அடையார் தாமோதரபுரம் புதிய தெருவில் புதிதாக வீடு ஒன்று கட்டியுள்ளேன்.
இந்த வீட்டிற்கு மும்முனை மின்சார இணைப்பு வேண்டி, பெசன்ட் நகர் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தேன். அதன் படி மின்வாரிய இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன், தன்னிடம் புதிய இணைப்பு கொடுக்க ₹40 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். மேலும், முன்பணமாக ₹10 ஆயிரம் உடனே தரவேண்டும் என்றார். அதன்படி, நாளை பணம் தருவதாக கூறிவிட்டு வந்தேன். பின்னர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
அதன் படி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகுமாரிடம் ரசயானம் தடவிய ₹10 ஆயிரம் பணத்தை கொடுத்து லஞ்சம் கேட்ட இளநிலை பொறியாளரிடம் அளிக்க சொன்னார்கள். இந்நிலையில், நேற்று காலை பெசன்ட் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ₹10 ஆயிரம் பணத்தை இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து ₹10 ஆயிரம் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மின்வாரிய இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.