புதுடெல்லி: மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாகி கடந்த ஓராண்டில் 35.18 லட்சம் எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதித்துறை டிஜிட்டல்மயமானதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சுதந்திர இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவையே பல தசாப்தங்களாக குற்றவியல் நீதி அமைப்பின் அடித்தளமாக இருந்தன. இந்த காலனித்துவ சட்டங்கள், ஆட்சியாளர்களின் நலனை மையமாகக் கொண்டவையாக இருந்ததாலும், காலப்போக்கில் மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்புடையதாக இல்லாததாலும், நீதி வழங்குவதில் பெரும் காலதாமதம், நிச்சயமற்ற தன்மை மற்றும் சாமானியர்களுக்கு இருந்த அணுகல் குறைபாடு போன்ற பல சவால்களை ஏற்படுத்தின. இதனால், நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டது.
இந்தச் சூழலை மாற்றியமைத்து, மக்களை மையமாகக் கொண்ட புதிய நவீன நீதி அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், ஒன்றிய அரசு இந்த மூன்று சட்டங்களுக்கும் மாற்றாக புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்த புதிய சட்ட சீர்திருத்தம் அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘புதியதாக கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நாட்டின் நீதி வழங்கும் முறையை மாற்றி அமைக்கத் தொடங்கியுள்ளன. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிடா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று புதிய சட்டங்களும் வெறும் சட்டத் திருத்தங்கள் அல்ல; மாறாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் மக்களை மையப்படுத்திய நீதி அமைப்புக்கான மாபெரும் சாதனையாகும்.
காலனித்துவ மரபிலிருந்து விடுபட்டு, மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் நீதி அமைப்புக்கு இந்தியா மாறுவதற்கான அடித்தளமாக இந்த சீர்திருத்தம் இருக்கும். இனிமேல் நாட்டின் எந்த மூலையில் குற்றம் நடந்தாலும், மூன்று ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும்’ என்றார். மேற்கண்ட புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்து ஓராண்டான நிலையில், கடந்த ஓராண்டில் அடைந்த முன்னேற்றங்கள் குறித்து ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 8.61 லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், 43,000க்கும் அதிகமான சிறைத்துறை ஊழியர்கள், 11,000க்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகளுக்குப் புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரை, புதிய சட்டங்களின் கீழ் 35.18 லட்சம் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு தடயவியல் சான்றுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. 14,000க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும், 22,000 நீதிமன்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, விசாரணை தொடர்பான தகவல்கள் புகார்தாரர்களுக்கு 90 நாட்களுக்குள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகின்றன. இந்த சீர்திருத்தங்கள் சாமானிய மக்கள் எளிதில் நீதித்துறையை அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இனிமேல் மக்கள் எங்கிருந்தும் ‘ஜீரோ எப்ஐஆர்’ மற்றும் ‘இ-எப்ஐஆர்’ பதிவு செய்ய முடியும். இந்த மாற்றங்களின் குறிப்பிடத்தக்க வெற்றியாக, முன்னோட்டத் திட்டமாகச் செயல்படுத்தப்பட்ட சண்டிகரில் கடந்த ஓராண்டில் 1,459 இ-எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் விகிதம் 91.1% ஆக உயர்ந்துள்ளது. மேலும், சராசரி விசாரணை காலம் 110 நாட்களாகக் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் 14,000க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும், 22,000 நீதிமன்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, விசாரணை தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு 90 நாட்களுக்குள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகின்றன. இனிமேல் நாட்டின் எந்த மூலையில் குற்றம் நடந்தாலும், மூன்று ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும்.