கொடைக்கானல் : சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து கொடைக்கானலில் போதை காளான் விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இவ்வாறு சுற்றுலா வரும் பயணிகளை குறி வைத்து சில வாலிபர்கள் போதை காளான் விற்பனை செய்து வருகின்றனர். கொடைக்கானல் போலீசார் அவ்வப்போது விற்பனையில் ஈடுபட்டு வருவோரை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் உள்ள பகுதிகளில் போதை காளான் விற்கப்படுவதாக கொடைக்கானல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு நாயுடுபுரம் பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு போதை காளான் விற்ற வில்பட்டி பகுதியை சேர்ந்த மோகன் (27), வில்பட்டி அன்னை சத்யா காலனி தங்கராஜ் (26), வில்பட்டி அட்டுவம்பட்டி கார்த்திகேயன் (26) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 80 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.