திருவாரூர்: ஒன்றிய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால் மூன்று மாதங்களில் அரிசி விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் கடந்த ஒரு மாதத்தில் ஒரு கிலோ அரிசி ரூ.15 அதிகரித்து இருப்பதாக கூறினர். ஒன்றிய அரசு புழுங்கல் அரிசி தடை விதிக்காமல் பச்சரிசிக்கு மட்டுமே தடை விதித்திருப்பதாகவும் அவர்கள் குற்றச் சாட்டினர்.
இதனால் இடை தரகர்கள் புழுங்கல் அரிசியை பதுக்கி செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்துவதால் நாளுக்கு நாள் அரிசியின் விலை ஏற்றம் கண்டு வருவதாக புகார் தெரிவித்தனர். இதே நிலை நீடித்தால் விரைவில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசி ஆலை உரிமையாளர்கள் எச்சரித்தனர். விரைவில் அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு முற்றிலும் தடை விதித்து விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.