விக்கிரவாண்டி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பாக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார். இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சீமான், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையை கடைபிடித்தால் தான் நிதி ஒதுக்குவோம் என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும். மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயின் பெருக்கம்தான் ஒன்றிய அரசின் நிதி. என்னுடைய பணத்தை எடுத்து வைத்துகொண்டு பணம் கொடுக்கமாட்டோம் என்பது திமிறு. இந்தி படிக்க வேண்டும் என்ற தேவை என்ன உள்ளது.
இந்தி படித்தால் பசி, பட்டினி தீர்ந்துவிடுமா? மொழி வாரியாக தான் இந்தியா பிணைந்து உள்ளது. தாய் மொழியாக தமிழ், பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எதனை வேண்டுமானாலும் படிப்பேன் என்பது எனது விருப்பம். மும்மொழி கொள்கை என்பது மோசடி கொள்கை. 3ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைக்க கூடாது. அந்த தேர்வில் தோல்வியடைந்தால் பிஞ்சு மனதில் நஞ்சு வளராதா? ஆட்சிக்கு வந்து 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்றார்கள். அதை செய்யவில்லை. இந்தி எதற்காக தேவை என்பதற்கு அண்ணாமலை ஒரு காரணம் கூற வேண்டும். இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம்.