சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவல்லிக்கேணியில் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி தனியார் நிறுவன ஊழியர் முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் சன்னிலாய்டு தவிர மற்ற 4 பேருக்கும் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் சன்னிலாய்டுவிடம் நீதிமன்ற உத்தரவின் பேரில், காவல்துறை விசாரணை செய்ததில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்கு உற்பட்ட பகுதியில் ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கொண்டு வந்த ரூ.40 லட்சத்தை பிரித்து, ரூ.20 லட்சத்தை திரும்ப அளித்துவிட்டு, மீதம் இருந்த ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு, வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ், பாபு ஆகியோருக்கு தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ராஜா சிங் உள்ளிட்டோர் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ஆயிரம்விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், இந்த வழக்கின் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. காவல்துறை அதிகாரி சன்னிலாய்டின் ஒப்புதல் வாக்குமூலத்தில் 20 லட்சம் ரூபாய் தொகையை குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்று கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, விசாரணை தொடர்ந்து நடந்துவரும் நிலையில் மனுதரார்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.