புதுடெல்லி: நாட்டில் உணவு பதப்படுத்தும் துறை எழுச்சி அடைந்து வருவதாகவும், கடந்த 9 ஆண்டுகளில் ரூ.50ஆயிரம் கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பாரத் மண்டபத்தில் உலக உணவு இந்தியா 2023ம் ஆண்டு கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஒரு லட்சத்திற்கும் அதிகமாக சுய உதவி குழுக்களுக்கு ஆரம்ப கட்ட மூலதன நிதியுதவியை பிரதமர் மோடி வழங்கினார்.
தொடர்ந்து கண்காட்சியில் உணவு அரங்குகளை திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்த நிகழ்ச்சியானது உலகின் உணவு கூடையாக காட்டுவது மற்றும் 2023ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடுவதை நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் உணவு பதப்படுத்துதல் துறையில் ரூ.50ஆயிரம் கோடி அந்நிய நேரடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இது தொழில் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான அரசின் கொள்கையின் விளைவாகும்.
பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி 150 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் பதப்படுத்தும் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது” என்றார். இந்த கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட சமையல்கலைஞர்கள் கலந்துகொண்டு பாரம்பரிய இந்திய உணவு வகைகளை வழங்குகின்றனர். முக்கிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட 80 நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.