ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே தொட்டபெட்டா சாலை சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தொட்டபெட்டா காட்சி முனையில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தொலைநோக்கி இல்லம் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை உள்ளன.
அதே சமயம் தொட்டபெட்டா சிகரம் மற்றும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில், இச்சாலை மிகவும் பழுதடைந்து இருந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மாவட்ட ஊராட்சி முகமை சார்பில் சீரமைக்கப்பட்டது. எனினும் இச்சாலையில் இருபுறங்களிலும் மரங்கள் உள்ளதால் என்ன நேரமும் நிழல் விழும் நிலையில் இச்சாலை மீண்டும் பழுதடைந்தது.
பெரும்பாலான இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டதால் சிறிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இச்சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து இந்த சாலை சீரமைப்பு பணிகளை வனத்துறை துவக்கியுள்ளது.
தொட்டபெட்டா சாலையில் ஏற்பட்டுள்ள பழங்களை மூடும் பணிகள் நேற்று முன்தினம் முதல் துவக்கப்பட்டுள்ளது. இதனால் தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் நாளை முதல் சாலை மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.