தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இன்று 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் பாத்திமா நகர் பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பின்னர் ஆலயத்தில் முன்பு உயிரிழந்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட போராட்டக் குழுவினர் துப்பாக்கி சுட்டில் பலியான 15 பேருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.