தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. விலையை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் ஆர்வத்துடன் மீன்களை வாங்கி சென்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திரேஸ்புரம், மணப்பாடு உட்பட 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசை படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருவதும் வழக்கம். இந்நிலையில் திரேஸ்புரத்தில் இருந்து விசை படகுகள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.
இதனால் திரேஸ்புர நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். நெத்திலி மீன் ஒரு கூடை ரூ.3,500-க்கும், சீலா மீன் கிலோ ரூ.1,300 வரையிலும், விலை மீன் ரூ.400-க்கும், பாறை மீன் ரூ.300-க்கும் விற்பனையாகின. அனைத்து வகையான மீன்கள் மட்டுமல்லாதா நண்டு, இறால் ஆகியவைகளுக்கும் நல்ல விலை கிடைத்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வர விடுமுறை நாள் என்பதால் விலை உயர்வை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்க திரண்டதால் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகம் களைகட்டியது.