தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி வசந்தகுமாரின் மகன் மாரிச்செல்வமும், திருவிக நகரை சேர்ந்த பால் வியாபாரி முத்துராமலிங்கத்தின் மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு கார்த்திகா தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 30ம் தேதி இருவரும் கோவில்பட்டி சென்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். மாரிச்செல்வம் மற்றும் கார்த்திகா இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவரை தனது மகள் திருமணம் செய்ததால் முத்துராமலிங்கம் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
முருகேசன் நகருக்கு சென்ற அவர் மாரிச்செல்வம் வீட்டில் தகராறில் ஈடுபட்டு மிரட்டலும் விடுத்துள்ளார். நேற்று மாலை 3 இருசக்கர வாகனத்தில் அங்கு சென்ற 6 பேர் கொண்ட கும்பல் மாரிச்செல்வம், கார்த்திகா ஜோடியை வீட்டுக்குள்ளயே வெட்டி கொன்றது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் ஆட்களை வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அவருக்கு 3 மகள்கள் இருக்கும் நிலையில் மூத்த மகளான கார்த்திகா கடும் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்ததால் முத்துராமலிங்கம் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. மேலும், முத்துராமலிங்கத்தின் உறவினர்கள் கருப்பசாமி, பரத் உள்ளிட்டோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.