சென்னை: தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்க ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக 9 மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்குக் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. சென்னையில் ஏற்கனவே டோரண்ட் கேஸ் என்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியை சுற்றியுள்ள பல பகுதிகளில் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதற்காக குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க கோரி அந்த நிறுவனமானது விண்ணப்பித்திருந்தது. அதன்படி சுமார் ரூ.35 கோடி செலவில் 23 கிலோமீட்டர் நீலத்திற்கு குழாய் அமைக்கப்படவுள்ளது. இதில் சுமார் 776 மீட்டர் பகுதி கடலோர ஒழுங்குமுறை ஆணைய பகுதிகளுக்குள் வருவதால் இதற்கு கலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்க கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கடலோர ஒழுங்குமுறை ஆணையம் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கலாம் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்த உடன் உடனடியாக குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.