கொழும்பு: தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 5ஆம் தேதி 3 படகுகளுடன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்கள் (ஆகஸ்ட் .5)மன்னார் வடமேற்கு குதிரை மலை கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்படித்ததாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அதிக குதிரை திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி மீன்வளத்தை அழித்ததாகவும் கூடுதலாக வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த 20ம் தேதி வரை இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
20ம் தேதி மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதி (3.09.2024) இன்றுவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். 2 முறை காவலை நீட்டித்த நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் 22 மீனவர்களையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். 3 படகில் ஒரு படகில் 12 பேரும், மீதி 2 படகுகளில் 10 பேரும் என 22 பேரை கைது செய்தனர். இதில் கைதான மீனவர்களில் 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ; எஞ்சிய 10 பேருக்கு செப்டம்பர். 10 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை மதிப்பில் ரூ.1.5 கோடி அபராதமானது இந்திய ரூபாய் -மதிப்பில் சுமார் ரூ.42 லட்சம் ஆகும்.அபராதத்தை கட்ட தவறும்பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.