தூத்துக்குடி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத தூத்துக்குடி மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பு மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்கள். கடந்த 4 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் வருமானம் இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலான கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கரைவலை மீன்பிடிப்பு தொழில் மூலம் 300 ரூபாய் வரை கூலி கிடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். கடலில் சுமார் 2 கி.மீ. தொலைவிற்கு படகில் சென்று வலைகளை மீனவர்கள் வீசி வருகின்றனர். பின்னர் கரையில் நின்றுகொண்டு 7 மணிநேரம் வலையை இழுத்து மீன்பிடிக்கும் அவர்கள் களைப்பு தெரியாமல் இருக்க பாடல்களை படுகின்றனர். இந்த கரைவலை மீன்பிடிப்பில் தற்போது நெத்திலி, பாறை, சாலை உள்ளிட்ட மீன்கள் கிடைப்பதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கரைவலை மூலம் பிடிக்கப்படும் மீன்கள் ஐஸ் இல்லாமல் உயிருடன் விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் இந்த மீன்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.