*280 பாட்டில்கள் பறிமுதல்;போலீசார் விசாரணை
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மது விற்பனை, ஊரல் போடுதல் போன்ற குற்றசெயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று பெரம்பலூர் உட்கோட்டம் அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி தனிப்படையினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா அரும்பாவூர் மருதையான் கோவில் தெருவைச் சேர்ந்த மதி மகன் மருதபாண்டி (39) என்பவர் தொண்டமாந்துறை ஓயின் ஷாப் அருகில், சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, தனிப்படை போலீசார் மருத பாண்டியை பிடித்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அரும்பாவூர் போலீசார் மருத பாண்டியை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து 180 மில்லி அளவுள்ள 8 வகையான 240 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் 650 மில்லி அளவுள்ள 40 பீர் பாட்டில்கள் என மொத்தம் 280 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், மருதபாண்டியை அரும்பாவூர் காவல்நிலைய எஸ்எஸ்ஐ, வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தார்.
இதேபோல் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களள் ரகசியம் காக்கப்படும் என அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.