திட்டக்குடி: திட்டக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி காயத்ரி (39). இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். பெரம்பலூர்-கடலூர் மாவட்ட எல்லையான ராமநத்தத்தை அடுத்துள்ள எழுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்றவர்கள் படுகாயம் அடைந்தனர். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்துள்ள சம்பவத்தை பார்த்து இறங்கி சென்று பார்வையிட்டார்.
பின்னர் உடனடியாக அவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் படுகாயம் அடைந்தவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.