புரட்டாசி முதல் சனிக்கிழமை
23.9.2023 – சனி
புரட்டாசி சனிக்கிழமை வைணவர்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலோர்க்கு விசேஷமான நாள். அன்று வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்பு வகையினை நைவேத்தியங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா.. கோபாலா.. நாராயணா… என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி, பருப்பு, புளி, தானியம் தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாகச் செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர், பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர். புரட்டாசி சனிக்கிழமையில், ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு படையல் போட்டு வணங்குவார்கள்.
வீடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி, படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான சர்க்கரைப் பொங்கல், எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டைக் கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்தியங்கள் தயார் செய்ய வேண்டும். அன்றைய படையலுக்கு நாட்டு காய்கறிகள் மட்டும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். குத்து விளக்கிற்கு குங்குமம் வைத்து துளசி மாலை அணிய வேண்டும். மூன்று நுனி வாழை இலைகளை விளக்கிற்கு முன்புறம் போட்டு நைவேத்தியங்களை இலையில் பரிமாற வேண்டும்.
உத்தரணி அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம், விபூதி, குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து கோவிந்தா.. என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை வெங்கடேச பெருமாளை வழிபடுவது பழக்கம். சிலர் ‘மாவிளக்கு வழிபாடு’ செய்வதும் உண்டு. இடித்தெடுத்த பச்சரிசி, அச்சுவெல்ல பாகு, ஏலக்காய், எள் போன்றவை கலந்த இனிப்புக் கலவை விளக்கு வடிவில் தயாரிக்கப்படும். இதில் நெய் ஊற்றி திரிப்போட்டு
விளக்கேற்றப்படும்.
இதன் மூலம் நமது விருப்பங்கள் நிறைவேறும். சிலர் ஏதாவது ஒரு சனிக்கிழமை திருமலைக்கு சென்று பெருமாளை தரிசித்து வருவதும் உண்டு. திருப்பதி சென்று திருப்பி வந்தால் நமது வாழ்வில் சுபமான திருப்பங்கள் நிகழும் என்பது சத்தியம்.
ஏனாதி நாயனார் குருபூஜை
24.9.2023 – ஞாயிறு
ஏனாதிநாத நாயனார் திருநீறு அணிந்து சிவனடியார் வேடமிட்டு போரிட வந்த பகைவரை, சிவனடியாராகக் கருதி திருநீறு அணிந்திருந்த காரணத்தால் எதிர்க்காது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர். புகழ் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். ஏனாதிநாதர் கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்னும் ஊரில் பிறந்தார். ஏனநல்லூர் முற்காலத்தில் எயினனூர் என்று அழைக்கப்பட்டது.
ஏனாதிநாதர் இளைஞர்களுக்கு வாள் வீசும் தொழிற்பயிற்சி கற்பிக்கும் மையத்தை நடத்தி வந்தார். சோழ ராஜாவுக்கு தேவைப்படும் படைவீரர்கள் இவரிடத்தில் பயிற்சி பெற்றனர். தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கும் சோழ ராஜாவின் படையில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இவருடைய தாய்வழி உறவினர்களில் ஒருவர் அதிசூரன். அவனும் ஒரு வாள் பயிற்சி மையத்தை நடத்தி வந்தான். எல்லோரும் திறமை மிக்க ஏனாதிநாயரிடம் சேர்ந்ததால் அதிசூரன் பொறாமை கொண்டான். ஏனாதி நாயனார், பயிற்சி மையத்தின் மூலம் கிடைத்த பொருளைக் கொண்டு, சிவனடியார்களுக்கு அமுது படைத்து உபச்சாரம் செய்கின்ற உயர்ந்த நெறியைத் கைக்கொண்டார்.
அதிசூரன் இவரை எப்படியாவது தீர்த்துக் கட்டினால்தான் தாம் வாழ முடியும் என்று நினைத்தான். “நாம் இருவரும் போர் செய்வோம். யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் இந்த வாள் பயிற்சி மையத்தை நடத்தும் உரிமையை பெற்றுக் கொள்ளலாம்’’ என்று பேசி, போருக்கு அழைத்தான். வலுச்சண்டைக்கு அழைத்த அதிசூரனையும், அவனுக்குத் துணையாக வந்த உறவினர்களையும், போரில் வென்று துரத்திவிட்டார். உயிருக்கு பயந்து ஓடிய அதிசூரன், ஏனாதி நாயனாரை தந்திரமாக வெல்ல வழி வகுத்தான்.
மறுபடியும் போருக்கு அழைத்த அதிசூரன் அன்றைய தினம், நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, ஒரு சிவனடியார் வேடம் தாங்கி, ஆனால், அது வெளியே தெரியாத வண்ணம் கேடயத்தால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, நின்றான். ஏனாதிநாயனார் தயாரான நிலையில், அதிசூரன் சட்டென்று தன்னுடைய கேடயத்தை விலக்கி, முகத்தைக் காட்டினான். நெற்றி நிறைய நீறு பூசி சிவக் கோலம் தாங்கிய அவரை, சவக் கோலத்தில் தள்ளி விடலாகாது என்று தவக்கோலத்தில் நின்றார் ஏனாதி நாயனார். வாளும் கேடயமும் கீழே போட்டுவிட்டார். வணங்கினார்.
இந்தத் தருணத்தை பயன்படுத்திக்கொண்டு, ‘‘பழி வாங்க இதுவே நேரம்’’ என்று வழி மீது விழி வைத்துக் கொண்டிருந்த அதிசூரன் என்கின்ற அற்பன், தான் பூண்டிருந்த சிவக்கோலத்தையும் மதிக்காது, கையிலிருந்த கொடிய வாளை வீசி, ஏனாதிநாத நாயனாரின் உடலை மண்ணில் சாய்த்து மகிழ்ந்தான். ஏனாதி நாயனாரின் உடல் குருதி கொப்பளித்து ஓட, அவரை வீழ்த்திய அதிசூரன் பைத்தியம் பிடித்த நிலையில், வாளை வீசிவிட்டு, அந்த இடத்தை விட்டு ஓடினான். திருநீற்றின் முன் தன் உடைமையையும் உயிரையும் கொள்ளுவதற்கு சம்மதித்துச் சாய்ந்த ஏனாதி நாயனாரை சிவப்பரம் பொருள் உமை அம்மையாருடன் காட்சி தந்து, பெரும்பேறு அளித்தார். ஏனாதி நாயனார் குருபூஜை புரட்டாசி மாதம் உத்திராட நட்சத்திரம்.
திருவோணம்
25.9.2023 – திங்கள்
இன்றைய நாளுக்கு பல சிறப்புகள் உண்டு. புரட்டாசி திருவோணம் என்பதால் திருமலை அப்பனின் அவதார தினமாக இன்று அனுசரிக்கப்படும். ஆச்சாரியர்களின் சிறந்தவரான சுவாமி வேதாந்த தேசிகன் அவதரித்ததும் புரட்டாசி திருவோணத்தில்தான். அவருடைய அவதார ஜெயந்தி விழா விஷ்ணு திருக்கோயில்களில் கொண்டாடப்படும். மாத திருவோண நட்சத்திரத்தை அனுசரித்து சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருமஞ்சனம் முதலிய சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். குறிப்பாக, திருவரங்கம், ஒப்பிலியப்பன் கோயில், திருமலை, காஞ்சிபுரம், திருவஹீந்திரபுரம் முதலிய திருத்தலங்களில் இன்றைய தினம் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும்.
சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமை, சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரம் இரண்டும் இணைந்து வருவது சிறப்பு. இது தவிர, இந்த விஷ்ணு பகவானுக்கு உரிய ஏகாதசி விரதம்
கடைபிடிக்கப்படுகிறது.
பிரதோஷம்
27.9.2023 புதன்
இன்று 63 நாயன்மார்களில் ஒருவரான நரசிங்கமுனையாரின் குருபூஜை தினம். இது தவிர சகல சிவாலயங்களிலும் பிரதோஷம் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
அனந்த விரதம்
28.9.2023 – வியாழன்
அனந்தன் என்றால் பகவான் மகா விஷ்ணுவைக் குறிக்கும். அவருடைய ஆதிசேஷப் படுக்கைக்கு அனந்தசயனம் என்று பெயர். மூன்று மஹா மந்திரங்கள் உண்டு. அதில் இடையிலுள்ள மந்திரம் அனந்தாய நம: (மற்றவை அச்சுதாய நம: கோவிந்தாய நம:) ஒவ்வொரு நாளும் ஆசமநீயம் செய்யும் பொழுது இந்த மூன்று மந்திரங்களையும் சொல்வது வழக்கம். ஆனந்தனுக்கு உரிய பிரத்தியேக விரதம் இது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தில் கடும் துயரத்தில் இருந்தபோது, சாட்சாத் கிருஷ்ண பகவானே அவர்களுக்கு அனந்தபத்மநாப விரதத்தின் சிறப்பைச் சொன்னார். இதை தொடர்ந்து 14 ஆண்டுகள் செய்ய வேண்டும். சிவப்பு நிற ஆடை அணிந்து செய்வது சிறப்பு.
வீட்டை தூய்மைப்படுத்தி, பூஜையறையில் பெருமாள் படத்தை அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும். கலசம் வைத்தும் செய்யலாம். நிவேதனம் 14 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். நிவேதனமாக அதிரசம், போளி, பால் பாயசம், சித்ரான்னங்கள் வைத்துப் படைக்கலாம். வாழைப்பழம் தாம்பூலம் வைத்தாலும் 14 எண்ணிக்கையில் வைத்து வணங்க வேண்டும். வரலட்சுமி விரதம் போல, நோன்புக் கயிறு உண்டு. கயிறு சிவப்பு நிறத்தில் 14 முடிச்சுகள் போட வேண்டும். மகாவிஷ்ணுக்குரிய மந்திரங்களையும், ஸ்தோத்திரங்களையும் சொல்லி, தூபம் – தீபம் காட்டி நிவேதிக்க வேண்டும். பிறகு பழைய நோன்புக் கயிற்றை எடுத்துவிட்டு புதிய கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த அனந்தபத்மநாப பூஜை என்பது சகல துக்கங்களையும் விரட்டுவது. குலவிருத்திக்கு உதவுவது.
விரதத்தை முறையாக இருக்க முடியவில்லை என்று சொன்னால், குறைந்தபட்சம் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலுக்குச் சென்று, நெய்தீபம் போட்டு துளசி மாலை சாத்தி வணங்கி வரலாம். அருகாமையில் பள்ளிகொண்ட பெருமாள் இல்லை என்று சொன்னால், ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரையே பள்ளிகொண்ட பெருமாளாக நினைத்து வணங்கலாம். எப்படியும் அன்று மாலை பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வருவது நல்லது.
பௌர்ணமி உமா மஹேஸ்வர விரதம்
29.9.2023 – வெள்ளி
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு. சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம். இதில், உமா மகேஸ்வர விரதம் மிக முக்கியமானது. இந்த விரதத்தை முறையாக இருந்துவிட்டால் மற்ற விரதங்கள்கூட இருக்க வேண்டிய அவசியமில்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள். சிவசக்தி வடிவத்தை வழிபடும் உன்னதமான விரதம் உமா மகேஸ்வர விரதம். உலக இயக்கத்துக்கு சிவசக்தி தத்துவமே காரணம். அதுவே, அடிப்படை. இந்த உலகம் முழுக்கவே இந்த இரட்டை தத்துவங்களாகவே இருக்கிறது.
ஆணும் பெண்ணும் இணைந்தது தான் இவ்வுலக விருத்திக்கும், இயக்கத் துக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம். இதை உணராமல் இன்று எத்தனையோ குடும்பங்கள், சில உப்பு சப்பில்லாத கருத்து வேறுபாடுகளால் பிரிந்து இருக்கின்றன. அப்படிப்பட்ட தம்பதிகளின் கருத்து வேறுபாடுகளை நீக்கி, அவர்களை ஒன்றிணைக்கும் விரதம்தான் உமா மகேஸ்வர விரதம். சிவனையும் சக்தியையும் ஒருசேர வழிபட்டு, அவர்கள் நல்லாசிகளைப் பெறுவதுதான் இந்த விரதத்தின் நோக்கம். இந்தப் பூஜையால் தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை நிலவும் பெரியவர்களிடத்தில், ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அந்தக் குற்றம் நீங்கும். இந்த விரதத்தில் 16 முடிச்சு உள்ள சிவப்பு நோன்புக் கயிற்றை பூஜை செய்து கட்டிக் கொள்வார்கள்.
வேத விற்பன்னர்களைக் கொண்டு செய்யும் பொழுது இந்தப் பூஜையை மிக விரிவாகச் செய்யலாம். அதற்கான மந்திரங்களும் உண்டு. ஆனால், மிக எளிதாக இந்தப் பூஜையைச் செய்ய வேண்டும் என்று சொன்னால், கணவனும் மனைவியும் இணைந்து வீட்டை தூய்மைப்படுத்தி பூஜை அறையில் பார்வதி பரமேஸ்வரர் படத்துக்கு அலங்காரம் செய்து, விளக்கு ஏற்றி, தூப தீபங்கள் காண்பித்து, நிவேதனங்கள் செய்து, அதோடு சிவப்பு நிற 16 முடிச்சு உள்ள நோன்புக் கயிற்றையும் வைத்து பூஜை முடிவில் அதை கட்டிக் கொள்ள வேண்டும். இதனால், உமா மகேஸ்வரர்களின் பேரருள் கிடைக்கும். இதைத் தொடர்ந்து 16 ஆண்டுகள் விடாமல் செய்தால், பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.
தொகுப்பு: விஷ்ணுபிரியா