Sunday, February 25, 2024
Home » இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Kalaivani Saravanan

தாயுமானவர் குருபூஜை
3.2.2024 – சனி

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திகழ்ந்த தாயுமான சுவாமிகள், திருமறைக் காட்டிலே சைவ வேளாளர் குலத்திலே கேடிலியப்பப் பிள்ளையின் இரண்டாவது மகனாய்ப் பிறந்தார். திரிசிரபுரத்தில் விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கரின் கணக்கராகத் தந்தை பணிபுரிய, வடமொழி, தென்மொழி இரண்டும்கற்ற இவர், மௌனகுரு என்பாரிடம் அறிவுரை பெற்றார்.

தந்தையார் இறந்தவுடன் அரசு வேலையிலமர்ந்தார்; நாயக்கர் இறந்த பின், அரசி மீனாட்சி தன்பாற் காட்டிய முறையற்ற அன்பு காரணமாக ஒரு நாளிரவு ஊரை விட்டோடினார். ராமநாதபுரத்தில், தன் தமையனோடு இருந்தார். அவர் கட்டாயப் படுத்தியதால் மட்டுவார்குழலி என்ற பெண்ணை மணந்தார். கனகசபாபதி எனும் ஆண்குழந்தை ஈன்ற மனைவி, மறையவே யோகஞானங்களில் சிறக்கத் துறவு பூண்டார்.

சைவ சித்தாந்தம், அத்வைதம் ஆகிய இரு நிலைக்கும் ஒரு வகை சமரசம் கண்டவர். ‘உபநிடதக் கருத்துகளையும், மற்ற ஞான நூல்களின் உட்பொருளையும் மிகத் தெளிவாகத் தமிழில் பாடியவர். இவரது பாடல்கள் தமிழ்மொழியின் உபநிடதம் எனப்படுகின்றன. ஒரு மனிதனுக்கு பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள் உள்ளன.

* நம்மிடம் உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்புக்கு “பற்று’’ என்று பொருள்.

* அது வேண்டும் இது வேண்டும் என்கின்ற நினைவுக்கு “அவா’’ என்று பொருள்.

* பிறர் பொருளை விரும்புவது “ஆசை’’ எனப்படும்.

* எத்தனை வந்தாலும் திருப்தி இல்லாமல் நெய்யை ஊற்ற ஊற்ற எரிகின்ற தீயின் தன்மையைப் போல, எல்லையில்லாத ஆசைக்கு “பேராசை’’ என்று பெயர். இந்த பேராசைக்கு உதாரணமாக தாயுமானவரின் பாடலை மேற்கோளாகச் சொல்வார்கள்.

“ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
ஆளினுங் கடல்மீதிலே
ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகி்ன்ற
பரிபூர ணானந்தமே’’.

திருத்தலங்கள் தோறும் சென்று இறை வழிபாடு செய்த இவர், தவ வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்தார். தவத்தின் மூலமாக சிவத்தைக் கண்ட தாயுமானவர் ராமநாதபுரம் சென்றபோது அங்கேயே தைமாதம் விசாக நட்சத்திரத்தன்று, மகாசமாதி கூடினார். இவரது சமாதிக் கோயில் ராமநாதபுரம் நகர் எல்லையில் உள்ள லட்சுமிபுரத்தில் உள்ளது.

இவரது குருபூஜை விழா திருச்சியிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாயுமானவர் குருபூஜை தினம் இன்று. இன்று சனிக்கிழமை என்பதால், திருநள்ளாறு சனி பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யலாம். சனிதோஷம் உள்ளவர்கள், இன்று அருகாமையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கோ, சிவன் கோயிலில் சனி பகவான் சந்நதிக்கோ சென்று விளக்கேற்றுவது நல்லது.

திருநீலகண்டர் குருபூஜை
3.2.2024 – சனி

திருநீலகண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவரைப் பற்றிய குறிப்புகள், 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும். சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், (‘‘திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்’’ – திருத்தொண்டத் தொகை) பின்னர் 12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர். என்பது மேலுள்ள நூல்களில் உள்ள செய்தி.

“சொல்லைச் சிவன் திரு ஆணைதன் தூம்மொழி தோள் நசையால்
ஒல்லைத் துறந்து உரு மூத்தற் பின் உமைகோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளொடு இளமை பெற்று இன்பம் மிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே”

– திருத்தொண்டர் திருவந்தாதி

இவர், தாம் வனையும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது வழக்கம். எப்பொழுதும் நாவால் திருநீலகண்டம் என்பதைப் பெருமந்திரமாகக் கொண்டு ஒழுகினார். இதனால் அவருக்கு “திருநீலகண்டக்குயனவார்’’ என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவரிடம் ஒரு பலவீனம் இருந்தது; இளமை தூர்ந்த அவர், இன்பத்துறையில் எளியரானார்.

அவர் தம் புற ஒழுக்கத்தை அறிந்த மனைவியார் மனத்தால் வேதனை அடைத்தார். கணவனுக்கு வேண்டும் பணிகளை எல்லாம் குறைவில்லாமல் செய்து உடனுறை வுக்கு இசையாதிருந்தார். ஒரு நாள் நாயனார் அவரை தீண்டுவதற்குச் சென்றார். உடனே ‘‘எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்’’ என அம்மாதரசி ஆணையிட்டார்.

அவ்வாணைக்கு நாயனார் கட்டுண்டார். மனைவியாரை அயலவர் போல் நோக்கி, எம்மை எனச் சொன்னமையால் ‘‘எம் மாதரையும் தீண்டேன்’’ உறுதிகொண்டார். இந்த ஒழுக்கம், முதுமை வரை நீண்டது. இவர் பெருமை உலகறியச்செய்ய எண்ணிய சிவபெருமான் சிவயோகியார் வடிவில் ஒரு திருவோடு கொடுத்து அவரே மறைத்து வைத்து திருப்பிக் கேட்டார். இவரால் தர முடியவில்லை. உடனே பஞ்சாயத்து கூட்டினார், சிவயோகியார்.

“இந்தக் குயவன் என் ஓட்டைத் தருகிறானில்லை. அதனை அவன் கவர்ந்து கொள்ளவில்லை என்று மனைவியின் கைபிடித்து சத்தியம் செய்ய வேண்டும்.” பஞ்சாயத்தார்களும், ‘‘உம்மால் இவர் திருவோடு கெடவில்லை என்றால், உம்முடைய மனைவியின் கைபிடித்து குளத்திலே மூழ்கிச் சத்தியம் செய்து கொடுத்தலே முறை” எனத் தீர்ப்பளித்தனர்.

திருநீலகண்டர், தம் மனைவியைத்தான் தீண்ட இயலாத சபதத்தை வெளிப்படுத்த முடியவில்லை, “பொருந்திய வகையால் மூழ்கித் தருகிறேன்” எனச் சொல்லி தம் வீட்டை அடைந்தார். வீட்டில் இருந்த மனைவியாரையும் அழைத்துக் கொண்டு, தில்லைத் திருப்புலீச்சரக் கோயிலின் முன்னுள்ள குளத்தை அடைந்தார். மூங்கில் தடியொன்றில் ஒரு முனையைத் தாமும் மறுமுனையை மனைவியும் பிடித்த வண்ணம் குளத்தில் இறங்கினர்.

அப்பொழுது சிவயோகியார், “மனைவியின் கையைப் பிடித்து மூழ்குக’’ என வற்புறுத்தினார். அது செய்யமாட்டாத சபதத்தை அங்குள்ளோர் அனைவரும் கேட்கும் வண்ணம் வெளிப்படுத்தி திருநீலகண்டர் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினார். மூழ்கி கரையேறும் திருநீலகண்டரும் மனைவியாரும் முதுமை நீங்கி இளமைக் கோலத்தில் தோன்றினார்கள். இறையவர், உமையம்மையாரோடு, ‘‘புலனை வென்ற இவர் தம் பெருமை வெளிப்படுத்தவே இவ்விளையாடல் புரிந்தோம்.!’’ என்றருளி மறைந்தருளினார். நாயனாரும் துணைவியாரும் இவ்வுலகிலே இறைப்பணியாற்றிச் சிவலோகமடைந்தனர். அவர் குருபூஜை இன்று.

சூரிய வழிபாடு
4.2.2024 – ஞாயிறு

இன்று சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள்.

ஆண்டாள் புறப்பாடு
5.2.2024 – திங்கள்

இன்று கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயம் கோயிலில் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு இன்று நடைபெறும்.

ஏகாதசி 6.2.2024 – செவ்வாய்

இன்று தைமாத தேய்பிறை ஏகாதசி. ‘சுபலா’ என்றும் பெயர் பெறும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில்இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்குக் கிடைக்கப்பெறும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், எல்லா ஏகாதசியும் இறையருளைப் பெற்றுத் தரும்.

பிரதோஷ நாள்
7.2.2024 – புதன்

இன்று புதன்கிழமை. பிரதோஷ நாள். மாலை சிவாலயத்துக்குச் சென்று வழிபடுவது சாலச்சிறந்தது. இன்று திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில், ஸ்ரீநரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவையைக் காணலாம்.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம்
8.2.2024 – வியாழன்

குருவாரமாகிய இன்று, மாத சிவராத்திரி நாள். இரவு சிவாலயம் சென்று வழிபடுவது நல்லது. இயன்றால் இரவு சிவராத்திரி விரதம் இருக்கலாம். கண்விழிக்கலாம். திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் நாச்சியார் திருக்கோலத்திலும் (மோஹினி அவதாரம்) இரவு யாளி வாகனத்திலும் வீதி உலா வருகிறார் பெருமாள்.

திருவோண விரதம்
9.2.2024 வெள்ளி

இன்று சுக்கிரனுக்கு உரிய கிழமை. சந்திரனுக்குரிய திருவோண நாள் திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம். திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே என்று திருவோண நட்சத்திரத்தின் சிறப்பைச் சொல்வார்கள். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் விரதமிருந்து திருமாலை வழிபடுவது பூர்வஜென்ம வினைகளைப் பூண்டோடு ஒழிக்கும். கும்பகோணத்திற்கு அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் போன்ற சில தலங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாகும். அனேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் திருவோணச் சிறப்பு வழிபாடுகளும், திருமஞ்சனமும் நடைபெறும்.

சில கோயில்களில் உள்பிரகாரப் புறப்பாடும் உண்டு. இன்றைய தினம் காலை எழுந்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு திருவோண விரதத்தை ஆரம்பிக்க வேண்டும் மாலையில் துளசிமாலை யோடு சென்று அருகில் உள்ள பெருமாள் கோயிலில் விளக்கேற்றி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமியை வணங்கி பாலோ பழமோ நிவேதனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

தை அமாவாசை
9.2.2024 – வெள்ளி

அமாவாசை என்பது மிகப் புனிதமான முக்கியமான தினம். அன்று தென்புலத்தார் என்று போற்றப்படுகின்ற முன்னோர்களுக்கு நாம் வழிபாடு நடத்துகின்றோம். அந்த வழிபாட்டு முறை எப்படி இருந்தாலும்கூட அவசியம் ஏதோ ஒரு வழியில் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துகிறோம். பன்னிரண்டு மாதங்களிலும் அமாவாசை வந்தாலும்கூட, உத்தராயண காலத்தில் வருகின்ற தை அமாவாசையும், தட்சிணாயண காலத்தில் வருகின்ற ஆடி அமாவாசையும் முக்கியமானது.

தை அமாவாசை இந்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அமாவாசை திதியானது காலை 7.14 மணி முதல் ஆரம்பிக்கிறது. அடுத்த நாள் அதிகாலை 3.53 வரை உள்ளது. காலையிலேயே அமாவாசைத் திதி ஆரம்பித்துவிடுவதால், முற்பகலில் பிதுர்க்காரியங்களை மேற்கொள்ளலாம். காலையில் வீட்டைத் தூய்மைப் படுத்தி, நீராடி, வெளியிலே வாசலுக்கு கோலம் போடாமல், உச்சிப்பொழுது வருவதற்குள் முன்னோர்கள் காரியத்தை நிறைவேற்றிவிடவேண்டும்.

உணவுக்காகவும், தாகத்திற்காகவும் எள்ளும் நீரும் அளித்து, பின் தூய்மையான உணவுகளைச் சமைத்து, தலைவாழை இலை போட்டுப் படைக்க வேண்டும். காகத்திற்கு உணவிட வேண்டும். பிற்பகலில் அதாவது உச்சிப்பொழுது கடந்த பிறகு இந்தப் பணிகளைச் செய்யக் கூடாது. இது மிகச் சிறப்பான அமாவாசை. இதன் மூலமாக முன்னோர்களுடைய ஆசிகள் முழுமையாகக் கிடைக்கும்.

இன்று திருநாங்கூரில் சிறப்பான “மஞ்சள் குளி’’ உற்சவம் நடைபெறும். இந்த தை அமாவாசையில்தான் அபிராமிபட்டர், “அபிராமி அந்தாதி’’ பாடினார். இன்று மாலை அம்பாளுக்கு விளக்கு ஏற்றி வைத்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

You may also like

Leave a Comment

6 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi