Saturday, July 12, 2025
Home ஆன்மிகம் இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Nithya

5.7.2025 – சனி பெரியாழ்வார் திருநட்சத்திரம்

பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக அவதரித்தவர் ‘விஷ்ணு சித்தர்’ என்பது இயற்பெயர். திருவில்லி புத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களைப் பறித்துப் பூமாலையாகச் சாற்றுவதைக் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். ஆண்டாளின் வளர்ப்பு தந்தை. ஆண்டாளைத் திருவரங்கம் அரங்கனுக்கு மணம் முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.

பாண்டியன் வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைபெற்ற சமய வாதத்தில் வென்ற பெரியாழ்வார், அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்துயானை மீது வரும் பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடி வழகில் மயங்கி எங்கே இறைவனுக்குக் கண்ணேறு (கண் திருஷ்டி) விழுந்துவிடுமோ என்றஞ்சிப் பாடியதே திருப்பல்லாண்டு.

எல்லோரையும் காப்பாற்றும் இறைவனை, ஒரு தாய் பாவனையில், தன் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமே என்று அஞ்சி, மங்கல வாழ்த்து பாடுவது போல் பொங்கும் பரிவு கொண்டு பல்லாண்டு பாடியதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட ‘‘பெரியாழ்வார்’’ என அரங்கன் அழைக்க, பின்னர் இதுவே இவர் பெயராகிப்போனது.இன்றும் சாற்றுமறை எனும் வைணவ தினசரி வழிபாட்டின் தொடக்கத்திலும் முடிவிலும், வைணவக் கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின்போதும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும் போதும், பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்ட பின்னரே சுவாமியைத் திருக்கோயிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர். இவ்வழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இராமானுசர் கொள்கைகளைப் பின்பற்றும் பிறபகுதி வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. வடமொழி வேதங்களுக்கு ‘‘ஓம்’’ ஆதாரமாக இருந்து தொடக்கமும் முடிவும் ஆவதுபோல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு இந்தத் ‘திருப்பல்லாண்டு’ விளங்குகிறது. கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்தன.

5.7.2025 – சனி அருப்புக்கோட்டை கட்டங்குடி ரெட்டி சுவாமிகள் குருபூஜை

அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள கட்டங்குடி கிராமத்தில் மௌனகுரு ரெட்டி சுவாமிகள் என்ற சித்தர் வாழ்ந்தார். இவர் வேல்சாமி ரெட்டியார் என்ற இயற்பெயரைக் கொண்டவர் மற்றும் கட்டங்குடி ரெட்டி சுவாமிகள் என்று அறியப்பட்டார். அவர் தனது 55-வது வயதில் துறவு பூண்டார். அவரது ஜீவசமாதி அருப்புக்கோட்டைக்கு வடக்கே 7.3 கிமீ தொலைவில் கட்டங் குடியில் உள்ளது. கட்டங்குடி ரெட்டி சுவாமிகள், கற்றங்குடி மௌனகுரு வேலுச்சாமி என்றும் அறியப்படும் இவர் மூக்கையா சுவாமிகளின் குரு ஆவார். அவரது சமாதிக்கு குருபூஜை ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது 55-வது வயதில் துறவு பூண்டு, ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார். திருக்கூடல் மலையில் சிறிது காலம் தங்கியிருந்து, பின்னர் கற்றங்குடிக்கு திரும்பி, அங்குள்ள மடாலயத்திலேயே தங்கியிருந்து ஜீவசமாதியானார். கட்டங்குடி ரெட்டி சுவாமிகள், மனத்தூய்மையுடன் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிகிறார் அவருடைய சமாதியில் பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர்.

5.7.2025 – சனி வடக்குத் திருவீதிப்பிள்ளை திருநட்சத்திரம்

பெரியாழ்வார் அவதரித்த ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த ஆச்சாரியர் வடக்குத் திருவீதிப் பிள்ளை. ஸ்ரீரங்கத்தின் வடக்கு வீதியில் இவர் இருந்ததால் அந்த வீதியின் பெயரோடு சேர்ந்து இவர் பெயர் நிலைத்தது. ஸ்ரீ கிருஷ்ண பாதர் என்று இயற்பெயர். நம்பிள்ளையின் முக்கியமான சீடர்களுள் இவரும் ஒருவர். குருபக்தி மிகுந்தவர்.

திருமணம் ஆன பின்னும் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் இருந்தார். இதைக் கண்டு மிகவும் வருத்தமடைந்த அவருடைய திருத்தாயார், நம்பிள்ளையிடம் அவருடைய நிலையை பற்றிக் கூறினார். இதைக் கேட்டவுடன் நம்பிள்ளை வடக்கு திருவீதிப் பிள்ளையையும் அவருடைய மனைவியையும் கூப்பிட்டு, முறையான இல்லற வாழ்க்கையை நடத்தும் படிச் செய்தார். அதனால் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தார்கள். குருவின் அருளால் பிறந்ததால் நம் பிள்ளையின் பெயரான லோகாச்சாரியர் என்கிற பெயரை வைத்தார் அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறந்தவுடன் திருவரங்கம் பெருமாளின் “அழகிய மணவாளன்” என்ற பெயரைச் சூட்டினார். இருவரும் மிகச்சிறந்த வைணவ உரையாசிரியராகவும் ரகசிய நூல்களைச் செய்து தத்துவ விஷயங்களைச் தந்தவராகவும் விளங்கினார்கள். நம்பிள்ளை சொல்லச் சொல்ல வடக்குத் திருவீதிப் பிள்ளை ஓலையில் எழுதிய 36,000 படிகள் அடங்கிய திருவாய்மொழி உரைதான் பிரசித்தமான ஈடு உரை என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு திருவாய் மொழியைப் பற்றிப் பேசுபவர்கள் இந்த ஈட்டின் அடிப்படையில் தான் பேசுவார்கள். மணிப் பிரவாளமான இந்த ஈட்டினை தமிழாக்கம் செய்து தமிழகத்துக்கு அளித்தவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் புரா புருஷோத் தம நாயுடு அவர்கள். வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திரு நட்சத்திரம் இன்று.

6.7.2025 – ஞாயிறு ஆஷாட ஏகாதசி

வியாச பூர்ணிமாவுக்கு முன்னர் வரும் ஏகாதசியை ‘ஆஷாட ஏகாதசி’ என்பர். பகவான் விஷ்ணு இந்த ஆஷாட ஏகாதசி நாளில் யோக சயனம் மேற்கொள்வதும், கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி அன்று சயனத்திலிருந்து விழிப்பதாகக் கருதுவதும் வைணவர்களின் ஐதீகம். இந்த ஆஷாட ஏகாதசி மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 700 வருடத்துக்கும் மேலாக விட்டல பக்தியில் திளைக்கும் பக்தர்கள் இந்நாளில் பல இடங்களிலிருந்து லட்சக்கணக்கில் பண்டரிபுரத்துக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். ஒரு காலத்தில் மந்தாதா என்ற மன்னர் ஒரு வளமான ராஜ்யத்தை ஆட்சி செய்தான். அவரது ராஜ்யத்தில் மக்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, ஒரு காலத்தில் கடுமையான பஞ்சமும் வறட்சியும் ராஜ்யத்தைத் தாக்கி, பசி மற்றும் நோய்களால் ஏராளமான மக்கள் இறந்தனர். அந்த அவல நிலைக்கு தீர்வு காண ஒரு பயணத்தை மேற்கொண்டார். வழியில், அவர் அங்கிரஸ முனிவரைச் சந்தித்தார், அவர் தேவசயனி ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தினார். அவர் தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்பி, முனிவர் அறிவுறுத்திய அனைத்தையும் செய்தார். ராஜ்ஜியம் அதன் இழந்த மகிமையை மீண்டும் பெற்றது.

7.7.2025 – திங்கள் சாதுர்மாஸ்ய விரதம்

ஆஷாட மாதத்தின் சுக்ல பட்ச ஏகாதசி நாளில், மகாவிஷ்ணு ஆதிசேஷத்துடன் திருப்பாற்கடலில் படுக்கையாக யோக நித்திரைக்கு செல்கிறார். கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி நாளில் எழுந்தருளுகிறார். இவ்வாறு நான்கு மாதங்கள் யோக நித்திரையில் இருக்கிறார்! சன்யாசிகள் இந்த நான்கு மாதங்களில் விரதம் கடைப்பிடிக்கிறார்கள், வாசுதேவ துவாதசி யான இன்று சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பமாகிறது. சாதுர் மாஸ்ய விரதம் என்பது துறவிகளும், குருமார்களும் நான்கு மாதங்கள் (ஆடி முதல் கார்த்திகை வரை) மேற்கொள்ளும் விரதமாகும். இந்த காலத்தில், அவர்கள் தங்கள் உணவில் சில கட்டுப் பாடுகளை கடைபிடிக்கின்றனர். ஆன்மிக முன்னேற்றத்திற்காக மேற் கொள்ளப்படும் ஒரு விரதம் இது. துறவிகளும் சன்யாசிகளும் ஒரு நாளைக்கு ஒரு இடத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. ஆனால், சாதுர் மாஸ்ய விரத காலத்தில் மட்டும் அதற்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது. சாதுர்மாஸ்ய விரதத்தின் சங்கல்பம் உள்ளது. முதல் மாதத்தில் அவர்கள் தங்கள் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களையும், இரண்டாவது மாதத்தில் பாலையும், மூன்றாவது மாதத்தில் மோரையும், நான்காவது மாதத்தில் தானியங்களையும் தவிர்க்கிறார்கள். (மாதத்திற்குப் பதிலாக பதினைந்து நாட்களாக எடுத்துக் கொள்ளலாம்)

7.7.2025 – திங்கள் நாதமுனிகள் திருநட்சத்திரம்

ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியார்களில் முதல்வரான ஸ்ரீமத் நாத முனிகள் வீரநாராயணபுரத்தில் கி.மு 823ம் ஆண்டு சோபகிருது வருஷம், ஆனி மாதம், வளர்பிறை திரயோதசி திதியில், புதன்கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ரங்கநாதன். பரம வைதிகராக வேத சாத்திரங்களையும், இசையையும் கற்று வல்லவராக இருந்து அவதரித்தார். அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவர். ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்கள் காலப் போக்கில் மறைந்து போயின. அவைகளைத் தொகுத்த பெருமை ஸ்ரீமத் நாதமுனிகளையே சாரும். கண்ணனை குலதெய்வமாகக் கொண்ட குடும்பத்தில் அவதரித்த இவருடைய குலத்துக்கு சொட்டை குலம் என்று பெயர். இவர் அவதாரம் செய்த காட்டு மன்னார்கோயில் தென்னார்காடு மாவட்டத்தின் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ளது. சைவத்தில், நாயன்மார்களின் தேவார திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி அவதரித்த திருநாரையூர் என்னும் ஊரும் காட்டுமன்னார் கோயிலுக்கு பக்கத்திலேயே உள்ளது. இந்த விஷயத்தில் சைவத் திருமுறைகளையும், வைணவ பிரபந்தத்தையும் மறுபடியும் தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் பரப்பிய இரண்டு சமய அருளா ளர்களும் அவதரித்த ஊர் என்ற பெருமை இந்த ஊருக்கு உண்டு. 10 நாள்கள் நடைபெறும் நாதமுனிகள் உற்சவத்தில் இன்று அனுஷம் சாற்றுமுறை.

8.7.2025 – செவ்வாய் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும். ஜேஷ்டாபி ஷேகத்தை யொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வருவர். அங்கு கோயில் வழக்கப்படி கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்படும். பின்னர், காவிரி ஆற்றில் 1 தங்கக் குடம், 28 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டு தங்கக் குட புனித தீர்த்தம் யானை மீது வைத்தும் 28 வெள்ளிக் குடங்களைத் தோளில் சுமந்தும் ஊர் வலமாக அம்மா மண்டபம் சாலை, ராஜகோபுரம் வழியாக கோயிலுக்கு எடுத்துவரப்படும். பின்னர், மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு காலை 9.30 மணியளவில் திருமஞ்சனம் நடைபெறும். மூலவருக்கு தைலக்காப்பு நடைபெறும்.

10.7.2025 – வியாழன் காரைக்கால் மாங்கனி திருவிழா

காரைக்கால் மாங்கனி திருவிழா தமிழ் மாதமான ஆனி மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது – பொதுவாக குரு பூர்ணிமா பண்டிகையுடன் இணைந்து கொண் டாடப் படுகிறது. திருவிழாவின் போது, ​​பிச்சாண்டவரின் (பிட்சாடனர்) உற்சவர் மூர்த்தி தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் போது, ​​பக்தர்கள் கட்டிடங்களின் மேலிருந்து பழுத்த மாம்பழங்களை வீசி எறிவார்கள். காரைக்கால் அம்மையார் முன் சிவன் பிச்சைக்காரரான பிட்சாடனர் வடிவத்தில் தோன்றியதாகவும், அவர் அவருக்கு மாம்பழங்களை வழங்கியதாகவும் நம்பப்படுகிறது. ஆசை நிறைவேற உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் மாம்பழங்களை வீசுகிறார்கள். ஊர்வலம் கைலாசநாதர் கோயில் வளாகத்திலிருந்து தொடங்குகிறது. பாரதியார் தெரு, கண்ணடியார் தெரு, சர்ச் தெரு மற்றும் லெமைர் தெரு ஆகிய ஊர்வலப் பாதைகள் முழுவதும் பக்தர்கள் தெய்வத்திற்கு மாம்பழங்களை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi