Tuesday, June 24, 2025
Home ஆன்மிகம் இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Lavanya

7.6.2025 சனி சர்வ ஏகாதசி

இந்த மாதம் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசியில் நீரை கூட உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதால், இதற்கு “நிர்ஜலா ஏகாதசி” என்று பெயர் இந்த ஏகாதசியில் தான் பிரம்மா குபேரனைத் தோற்றுவித்தார். அவனுக்குச் சகல நிதிகளையும் தந்தார். எனவே இந்த ஏகாதசி உபவாசம் இருப்பவர்களுக்கு, குறைவற்ற செல்வம் நீங்காமல் இருக்கும் என்று பலச்சுருதியில் சொல்லப்பட்டிருக்கிறது.உபவாசம் என்பதற்கு இறைவனை நினைத்துக் கொண்டு அவன் அருகில் இருப்பது அல்லது இறைவனுக்கு அருகில் நம்மை கொண்டு போய் சேர்ப்பது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். ஏகாதசி உபவாசம் என்பது இறைவனிடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடிய உபவாசம். அன்றைக்கு உண்ணக் கூடாது, உறங்கக் கூடாது என்று உடலுக்கும் சில விதிமுறைகளை வகுத்துத் தந்தார்கள். இன்று முழுவதும் பகவானின் திருநாமங்களை பாட வேண்டும். ஆழ்வார்கள் பாசுரங்களை ஓத வேண்டும்.

8.6.2025 – ஞாயிறுபிரதோஷம்

‘‘பிரதோஷ தரிசனம் சர்வ பாவ விமோசனம்” என்பார்கள். நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளும் பிரதோஷ நாளில், சிவாலயம் செல்லுங்கள். சிவ தரிசனம் செய்யுங்கள். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை தரிசியுங்கள். ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு பலன்கள் இருக்கின்றன. இன்று சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை. வளர்பிறை வைகாசி பிர தோஷம் என்பதால் இதனை சுக்ல பட்ஷ மகா பிரதோஷம் என்பார்கள். மாலை வேளையில், பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடு செய்யுங்கள். நமசிவாய என்னும் பஞ்சாட்சரம் சொல்லி ஈசனை வணங்குங்கள். ருத்ரம் ஜபித்து, வில்வ அர்ச்சனை செய்யுங்கள். நந்திதேவருக்கு வில்வமும் அருகம்புல்லும் வழங்குங்கள். நன்மைகள் உங்களைத்தேடி வரும்.

9.6.2025 – திங்கள்வைகாசி விசாகம்

இன்று முருகப் பெருமானுக்குரிய வைகாசி விசாகம். விசாக நட்சத்திரம் ஞானத்திற்குரியது. அதனால்தான் இந்த நட்சத்திரத்தில் உதித்த முருகன் சிவனுக்கே குருவானார். விசாக நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம். குருபகவானின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரம். மேலும் 27 நட்சத்திரங்களில் 16வது நட்சத்திரமாக இந்த விசாக நட்சத்திரம் வருகிறது. இந்த நட்சத்திரத்தில் அவதரித்த முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் பதினாறு பேறுகளையும் பெறலாம். வைகாசி விசாகம் அன்று தான் இந்திரன், சுவாமிமலை முருகனை வழிபட்டு தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டான். திருச்செந்தூரில் வைகாசி விசாகம் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் பெருவிழாவாகக் கொண்டாடப் படாத முருகன் கோயில்களே இல்லை என்று சொல்லலாம். வைகாசி விசாகத்தன்று முருகன் கோயில்களில் வசந்த விழா நடக்கும். பால் அபிஷேகம் செய்தும், காவடி சுமந்தும், விரதமிருந்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர். விரதம் இருந்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். எதிரிகள் பயம் அகலும், தீராத நோய்கள் தீரும். பகை விலகி பாசம் பெருகும். வெற்றிகள் சேரும். குலம் தழைக்கும்; பிள்ளை வரத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மலைக் கோயில்களில் உள்ள முருகனை வழிபட்டால் முன்வினை பாவம் தீரும். பகைவர்கள் காணாமல் போவர்.விசாகம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, முருகனின் தோத்திரங்களை சொல்லிக்கொண்டே, பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு முருகப்பெருமான் படத்தின் முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். திருப்புகழைப் பாராயணம் செய்யலாம்.

9.6.2025 – திங்கள் நம்மாழ்வார் திருநட்சத்திரம்

சுவாமி நம்மாழ்வார். அவருடைய அவதார தினம் வைகாசி விசாகம். திருநெல்வேலிக்கு அருகே, தாமிரபரணி நதிக்கரையில் திருக்குருகூர் திருத்தலத்தில் (இப்போது ஆழ்வார்திருநகரி) வைகாசி விசாகத்தில் அவதரித்தார். சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வேதம் தமிழ் செய்த மாறன், வகுளாபரணன், குருகைப்பிரான், குருகூர் நம்பி, திருவாய்மொழி பெருமாள், பெருநல்துறைவன், குமரி துறைவன் என 38 திருநாமங்கள் இவருக்கு உண்டு.நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் ‘‘வேதம் தமிழ் செய்த மாறன்’’ என்றே புகழப்படுகிறார். கம்பர் இயற்றிய ‘‘சடகோபர் அந்தாதி’’ எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார். நம்மாழ்வார் இயற்றிய பிரபந்த நூல்கள் நான்கு: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவை ரிக், யசுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாகப் பெரியோர்கள் சொல்வார்கள். இந்தத் திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் எட்டு பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார். எல்லாப் பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் இல்லங்களிலும், ஆழ்வாரின் அவதாரத் திருவிழா, மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆழ்வார் திருநகரியில் பிரமாண்டமான பத்து நாள் உற்சவம் உண்டு. இல்லங்களில் அன்று பெருமாளுக்கு அபிஷேகம் செய்து நம்மாழ்வாரின் தமிழ்ப் பாடல்களைப் பாடுவார்கள். இந்த நாளில் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று, ஆழ்வார் அவதார விழாவில் கலந்துகொண்டு, நம்மாழ்வாரின் பேரருள் பெறுவோம்.

9.6.2025 திங்கள்திருவாய்மொழிப் பிள்ளை திருநட்சத்திரம்

வைணவ ஆச்சாரியரான மணவாள மாமுனிகளின் குரு. பிள்ளை லோகாச்சார்யாரின் சீடர் இவர். திருமலையாழ்வார் என்ற திருநாமத்துடன் வைகாசி விசாகத்தில் மதுரைக்கருகே குந்தீநகரம் (கொந்தகை) என்ற ஊரில் அவதரித்தார். மதுரை பேரரசின் ராஜா, சிறு குழந்தையை விட்டு இறந்து போனதால், அந்தப் பேரரசின் தலைமை ஆலோச கராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு ஆழ்வார் மீதும், ஆழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி மீதும், இருந்த பற்றினாலும் அவர் திருவாய்மொழியைப் பரப்பின விதத்தினாலும் இவருக்கு திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமமே இன்றளவும் மிகப் பிரசித்தமாக உள்ளது. பல தொண்டுகளைச் செய்தார். திருவாய்மொழிப் பிள்ளையின் முயற்சியால் மட்டுமே இன்று நாம் ஆதிநாதர் ஆழ்வார் சந்நதியையும், எம்பெருமானார் சந்நதியையும் சேவிக்க முடிகிறது. இவர் தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக நம்மாழ்வாருக்காகவும், திருவாய்மொழிக்காகவும் அர்ப்பணித்தார். பிள்ளை லோகாசாரி யருடைய ஆணைக்கிணங்க, பல இடங்களுக்குச் சென்று பல ஆசார்யர்களைப் பற்றி விஷயங்களைச் சேகரித்து, அனைத்தையும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரிடம் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் இவருடைய முழுமையான முயற்சியால் மட்டுமே ஈடு 36000 படி வ்யாக்யானம் கிடைத்தது, அதைத் தான் பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் மிகவும் பிரஸித்தமாகப் பரப்பினார்.

10.6.2025 – செவ்வாய் பௌர்ணமி

இன்று பௌர்ணமி நாள். கிரிவலம் வருவதற்கு ஏற்ற நாள். நிலவு புறப்படும் நேரத்தில், உங்களுக்கு தெரிந்த மந்திரங்களையும் ஸ்லோகங்களையும் சொல்லிக் கொண்டு மலைக் கோயில்களை வலம் வருவது மகத்தான பலன்களைத் தரும். இன்று சத்யநாராயண பூஜை செய்வதும் மிகச் சிறந்த பலன்களைத் தரும்.

12.6.2025 – வியாழன் திருஞானசம்பந்தர் குருபூஜை

சம்பந்தருக்கு மணமுடித்து வைக்க அவரது தந்தையார் சிவபாத இருதயர் ஆசைப்பட்டார். தந்தையின் விருப்பப்படி மணம் செய்து கொள்ள சம்மதித்த திருஞானசம்பந்தருக்கும் திருநல்லூர் நம்பியாண்டார் நம்பியின் திருமகளாருக்கும் திருமணம் நடைபெற்றபோது, மணமக்களோடு கூடியிருந்த அனைவரும் இறைவனின் அருள் ஜோதியில் கலந்து மறைந்தனர். திருநீலக்க நாயனார் வாழ்வுக்கும் ஞானசம்பந்தர் வாழ்வுக்கும் தொடர்பு உண்டு. இருவரும் ஒரே நாளில் முக்தி அடைந்தனர். அவருக்கு திருமண புரோகிதம் செய்து வைத்தவர் திருநீலக்க நாயனார். ஞானசம்பந்தரின் குரு பூஜை தினம் இன்று (வைகாசி மூலம்).

12.6.2025 வியாழன் திருநீல நக்கர் குருபூஜை

திருநீலநக்கர் திருவாதிரை நட்சத்திரம் கூடிய ஒரு நாளிலே சிவபூசை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி என்னும் கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமானை வணங்க விரும்பினார். அயவந்தி ஈசரை முறைப்படி பூசித்தார். அப்பொழுது சிலந்தி ஒன்று ஈசர் திருமேனியில் விழுந்தது. நீலநக்கரின் மனைவியார் அதனைப் போக்க வாயினால் ஊதித் தள்ளினார். நாயனார். ‘‘நீ சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேறொரு வகையால் விலக்காமல் எச்சில்பட ஊதினாய். இத்தகைய செய்கை செய்த யான் இனித் துறந்தேன்” என்றார். அன்று இரவு நீலநக்கர் துயிலும் பொழுது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி உன் மனைவி ஊதிய இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந் தியின் கொப்புளம்” என்று அருளினார். நீலநக்கர் விழித்தெழுந்தார். தம் தவறை உணர்ந்தார். மனைவியாரை உடனழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். அவர் முக்தித் தலம் சீர்காழிக்கு அருகே நல்லூர்ப் பெருமணம். (ஆச்சாள்புரம்). குருபூஜை வைகாசி மூலம் (இன்று).

12.6.2025 வியாழன் திருநீலகண்ட யாழ்ப்பாணர் குருபூஜை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் திருவெருக்கத்தம்புலியூரில் பாணர் குலத்தில் பிறந்தவர். இவர் சிவபெருமானுடைய திருப்புகழை யாழ்
மூலம் இசைக்க, ஏழிசையிலும் வல்லவரான தம் மனைவியார் மதங்கசூளாமணியாருடன் பல தலங்களைப் பாடினார். மதுரையில் கோயிலின் வாயிலில் இறைவனது புகழ்மாலைகளை பாட வந்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருக்கு சிவபெருமான் பாணர்க்குப் பலகை இடும் படி இறைவர் ஆணையிட பாணருக்குப் பொற்பலகை இட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து பாடினார். தமது மனைவி மதங்க சூளாமணியாருடன் திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூட அடியார் திருக்கூட்டத்துடன் பெருஞ்சோதியினுட் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்றார். அவர் குரு பூஜை இன்று வைகாசி மூலம்.

12.6.2025 வியாழன் முருக நாயனார் குருபூஜை

முருக நாயனார் நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்
கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பல
வகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார். ஆறுகாலப் பூசைக்கும் அந்தந்த கால பூசைக்கேற்ப மாலைகளைத் தயார் செய்து திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாற்றி வணங்குவார். திருநல்லூர்ப் பெருமணத்தில் நிகழ்ந்த சம்பந்தரின் திருமணவிழாவில் கலந்துகொண்டு அவரோடு ஜோதியில் கலந்தார். அவர் குருபூஜை இன்று வைகாசி மூலம்.

13.6.2025 வெள்ளி கூடலழகர் கருட வாகனம்

108 வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. தினந்தோறும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் இன்று 4ம் நாள் திருவிழாவில் கருட வாகனத்திலும் தொடர்ந்து அடுத்தடுத்த நாள் களில் சேஷ‌‌வாகனத்திலும் எழுதருள்வார்.
9ம் நாள் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

விஷ்ணுபிரியா

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi