31.5.2025 – சனி சேக்கிழார் குருபூஜை
தெய்வச் சேக்கிழார் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் “திருத்தொண்டர் புராணத்தினை” இயற்றியவர். பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார். தில்லையில் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. புராணம் பாடி முடிந்ததும், அரசன் அவரைத் தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறிச் சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
உலகிலேயே சேக்கிழாருக்கு இரண்டு கோயில்களில் மட்டுமே தனிச் சந்நதி உண்டு, முதலாவது சேக்கிழார் பிறந்த ஊரான திருக் குன்றத்தூர் சிவன் கோயில், இரண்டாவது தேவகோட்டை நகரச் சிவன் கோயில். வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவாக சிவ ஜோதியில் கலந்த, அவருடைய குருபூஜை வைகாசி பூசம் அன்று சிறப்பாக நடைபெறுகிறது.
31.5.2025 – சனி நமிநந்தியடிகள் குருபூஜை
நமிநந்தியடிகள் நாயனார், சோழ நாட்டு ஏமப் பேரூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர். தினம்தோறும் திருவாரூர்க்குச் சென்று ஈசனைப் போற்றி வணங்கி வருவார். ஒரு நாள் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு சிறிது நெய் வேண்டினார். ஆனால் அவர்கள்தகாத வார்த்தை சொல்லி கேலி செய்தனர். ‘‘உன் இறைவன் சக்திவாய்ந்தவன் தானே. நீரால்கூட விளக்கு எரிக்கலாமே’’ என்று சொல்ல, அது கேட்டுப் பொறாத நமிநந்தியடிகள், பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கி பஞ்சாட்சரம் ஓதி குளத்து நீரை அள்ளிக் கொண்டு விளக்கு ஏற்ற, விளக்கு பிரகாசமாக எரிந்தது. கோயில் முழுக்க நீரிலேயே விளக்கு ஏற்றிய அதிசயம் தெரிந்து மக்கள் வியந்தனர். திருவாரூரில் வெகுகாலம் சிவத் தொண்டு புரிந்த அடிகள், வைகாசி மாதம் பூச நட்சத்திரம் அன்று சிவபதம் அடைந்தார். அவர் குருபூஜை நாள் இன்று.
31.5.2025 – சனி ஆழ்வார் திருநகரி உற்சவம் ஆரம்பம்
வைணவத்தில் ஆழ்வார்கள் வரிசை நம்மாழ்வாரிடம் தொடங்கி திருமங்கை ஆழ்வாரிடம் முடியும். “பராங்குச பரகாலர்கள்” என்று இந்த வரிசையைக் கூறுவது உண்டு. ஆழ்வார் அவதாரத்தலம், ஆழ்வார் திருநகரி. தாமிரபரணி கரையில் உள்ள திருத்தலம். இந்த தாமிரபரணி கரையை ஒட்டி வடகரையிலும் தென்கரையிலும் அடுத்தடுத்த திருத்தலங்களை ஒன்றாக நவதிருப்பதிகள் என்று அழைக்கும் மரபுண்டு. ஆழ்வார் திருநகரியில், ஆழ்வார் அவதாரம் செய்த வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவமாக ஆழ்வார் திருநாள் நடைபெறும். அந்த உற்சவம் இன்று துவக்கம்.
1.6.2025 – ஞாயிறு ஆரண்ய கௌரி விரதம்
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான கௌரி நோன்பு உண்டு. இதில் வைகாசி மாதம் வரும் சிறப்பான கௌரி விரதம் ஆரண்ய கௌரி விரதம். இதனை வனகௌரி விரதம் என்றும் அழைப்பார்கள். மரங்களை அம்பிகையாக நினைத்து பூஜிப்பது இந்த வழிபாட்டின் அடிப்படையான நோக்கம். அன்னை இயற்கையில் எங்கெங்கும் கலந்து இருக்கிறாள் என்பதை உணர்த்தும் இந்த விரத தினத்தில், சூரிய உதயம் முன் எழுந்து நீராடி, முறையான சங்கல்பம் செய்துகொண்டு, அம்பிகையை வணங்கி பூஜிக்க வேண்டும். அன்று இயன்றளவு முழுமையான உணவை உட்கொள்ளாமல், பால் பழங்களை மட்டுமே உட்கொண்டு, உபவாசம் இருக்க வேண்டும். அம்பிகையின் பாடல்களையும் ஸ்தோத்திரங்களையும் படிக்க வேண்டும். வேத மந்திரங்களை பாராயணம் செய்யலாம். இதனால் நிலைத்த செல்வமும் நீடித்த ஆயுளும் கிடைக்கும்.
1.6.2025 – ஞாயிறு சோமாசி மாற நாயனார் குரு பூஜை
திருவாரூர் பூந்தோட்டம் அருகே திருவம்பர் என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் மாறநாயனார். சிவபக்தி நிறைந்தவர். தினம் வேதத்தில் சொல்லியபடி வேள்விகள் பல செய்வார். சிறந்த சோம வேள்வியால் எம்பெருமானை வழிபட்டதால் இவர் சோமாசிமாற நாயனார் என்று அழைக்கப்பட்டார். இவருடைய காலத்தில் இருந்தவர்தான் தேவார மூவரில் ஒருவரான சுந்தரர். அவர் இறைவனோடு தோழமை கொண்டதை அறிவார் சோமாசிமாற நாயனார். அந்த சுந்தரரோடு தோழமை கொண்டு, அவருடைய பரிந்துரையின் பேரில், சிவனை நேரில் அழைத்து, யாகத்தின் அவிர்பாகம் வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. சுந்தரரின் நட்பை பெறுவது எப்படி என்று எண்ணினார்.
அப்போதுதான் சுந்தரருக்கு தூதுவளை கீரை பிடிக்கும் என்பதை அறிந்தார். தூதுவளைக் கீரையைத் தினமும் பறித்து கொடுத்து அதன் மூலம் நட்பை வளர்க்கலாம் என்று தினமும் தூதுவளைக் கீரையைப் பறித்துவந்து சுத்தம் செய்து சுந்தரருக்கு கொடுத்து சென்றார். அதனால் சுந்தரருக்கு இவர் மீதான அன்பு அதிகரித்தது. ஒருவழியாக சுந்தரரை நட்பாக்கிக் கொண்டார். மெல்ல தம் வேண்டுகோளை சுந்தரரிடம் தெரிவிக்க, முதலில் தயங்கிய சுந்தரர் பிறகு ஏற்றுக் கொண்டார். சுந்தரர், வேண்டுகோளை இறைவனிடம் தெரிவிக்க,
‘‘சரி, நான் அவிர்பாகம் வாங்கிக் கொள்ளச் செல்வேன். ஆனால் எப்பொழுது, எந்த உருவில் செல்வேன் என்பதைச் சொல்ல முடியாது. அவர் என்னை எந்த உருவில் வந்தாலும் தெரிந்து கொண்டு அவிர்பாகம் தந்தால் நான் வாங்கிக் கொள்கிறேன்” என்று உத்தரவாதம் தந்தார். அவருடைய உத்தரவாதத்தை மாறநாயனாருக்கும் சுந்தரர் தெரிவிக்க, சிவனே நேரில் வந்து வேள்விப் பயனைப் பெற்றுக் கொள்வது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்.
சோமாசியாரின் வேள்வியில் இறைவனும் நேரில் வரப் போவதாக மக்களுக்கு சொல்லவும் வெள்ளமென திரண்டார்கள். வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்தும்போது நான்கு நாய்களை கையில் பிடித்தபடி, வேடன் ஒருவன் யாகம் நடத்தும் இடத்துக்குள் நுழைந்தான். இவனைக் கண்டு வேதியர்கள் ஓடினார்கள். ஆனால், சோமாசிமாறனார் முதல் தெய்வமான விநாயகரைத் துதித்து யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார். வந்திருப்பது இறைவனே என்று உணர்த்தினார் விநாயகர். சோமாசிமாறநாயனார் “வேடன்” தான் “வேதன்” என உணர்ந்து வரவேற்று அவருக்கு வேண்டிய அவிர் பாகத்தை அளித்தார். அடுத்த நொடியில் நாய்கள் நான்கும் சதுர் வேதங்களாக மாற, எம்பெருமான் உமையாளோடு இடப வாகனத்தில் காட்சி தந்து அருளினார்.
சிவத்தலம் தோறும் தரிசனம் செய்து எம்பெருமானின் திருவருளைப் பெற்று, இறைவன் பாதத்தில் பணிந்தார். வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை. அந்த தினம் இன்று.
4.6.2025 – புதன் சிவகாசியில் தேரோட்டம்
சிவகாசியில் புகழ்பெற்ற விஸ்வநாத ஸ்வாமி விசாலாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. 16ஆம் நூற்றாண்டில் பாண்டிய ஆட்சியாளர் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட கோயில் பின்னால், மதுரை நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்தனர். இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற வைகாசிப் பெருவிழாவில் இன்று தேரோட்டம். நேற்று திருக்கல்யாணம். தேரில் சுவாமி விசாலாட்சியம்மாள் பிரியாவிடை உடன் காட்சி தருவார்.
5.6.2025 – வியாழன் பாபஹர தசமி
இன்று தசமி திதி. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இன்று மதியம் முதல் ஏகாதசி விரதம் இருப்பார்கள். இந்த தசமிக்கு பாபஹர தசமி என்று பெயர். பாவங்களைக் களைவது என்று இதன் பொருள். பாவங்களைக் களைந்த தசமி இந்த தசமி. காரணம் நினைத்தாலே பாபம் நீக்கும் இந்த நாளில் கங்கை உற்பத்தியானதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் வடக்கே கங்கா தசரா என்று இந்த நாளைக் கொண்டாடுவார்கள். வைகாசி வளர்பிறையில் கங்கையில் நீராட பாவங்கள் எல்லாம் தீர்ந்து போகும். கங்கையில் நீராட எல்லோராலும் முடியுமா? அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா என்று கேட்கலாம். உங்கள் வீட்டிலேயே நீங்கள் நீராடுகின்ற நீரில் கங்கையை வரித்துக் கொண்டு, அதாவது கங்கையாக இந்த தண்ணீர் இருப்பதாக நினைத்துக் கொண்டு நீராடலாம். குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ஓம் என்று தியானம் செய்து எழுதுங்கள். நதி தேவதைகளை அழைக்கும் வகையில் ஒரு எளிய ஸ்லோகம் சொல்ல வேண்டும்.
“கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ ஜலேஸ்மின் சன்னிதிம் குரு’’
அந்தநீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் “இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று இறையிடம் வேண்டிக் கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். கங்கையினுடைய முழுமையான அனுகிரகத்தைப் பெறலாம். அப்பொழுது கங்கை சம்பந்தப்பட்ட ஸ்லோகமோ கங்கா அஷ்டகமோ சொல்ல முடிந்தவர்கள் சொல்லலாம். குறைந்த பட்சம் இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள்.
“ஓம் நம சிவாயை நாராயண்யை தச
தோஷஹராயை கங்காயை சுவாஹா!’’
சிவபெருமானுடைய ஜடாமுடியில் வாசம் செய்து கொண்டு இருப்பவளே! அதே போல், நாராயணரின் பாதத்தையும் நீராடிக் கொண்டிருப்பவளே! அனைவரின் பாவங்களையும் போக்கக் கூடிய புண்ணியவளே! கங்கை தாயே! உம்மை வணங்குகிறோம்!! என்பதுதான் இம்மந்திரத்தின் அர்த்தம் ஆகும்.
5.6.2025 – வியாழன் திருவிடைமருதூர் திருக்கல்யாணம்
கும்பகோணம் அருகே புகழ்பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எத்தகைய சாபத்தையும் தீர்க்கும் சாபதோஷ நிவர்த்தித் திருத்தலமாக இத்திருத்தலம் வழங்குகின்றது. 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெறும் கோயில். இத்தலத்து இறைவன் ஸ்ரீ மகாலிங்கப் பெருமான். மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட மூன்று தலங்களில் இந்த தலம் நடுவில் அமைந்ததால், இடைமருதூர் என்று ஆனது. இறைவனுக்கு மருதவாணன் என்கிற பெயரும் உண்டு. அதிக தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. (திருவையாறும் அதிக பாடல் பெற்ற தலம்) ஞானக்கூத்த சிவப்பிரகாச தேசிகர் இத்தலத்தின் சிறப்பை மூவாயிரம் பாடல்களில் பாடி இருக்கின்றார். சம்பந்தப் பெருமான் இந்தத் திருத்தலத்துக்கு வந்த போது வழியெல்லாம் சிவலிங்கமாக இருந்தது. எனவே, தரையில் கால் பதிக்க அஞ்சினார்.
அப்பொழுது சிவன் “நம் குழந்தையை அழைத்து வா” என, அம்பிகை சம்பந்தரை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வந்ததாகச் செய்தி உண்டு. பெரும்பாலான கோயில்களில் சென்ற வழியே வெளியே வந்து விடலாம். ஆனால் இங்கே சென்ற வழியே திரும்பக் கூடாது. வேறு வாசல் வழியாக திரும்ப வேண்டும் என்பது விதி. காசிக்கு நிகரான இத்திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவத் திருவிழாவில் இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.