Wednesday, July 16, 2025
Home ஆன்மிகம் இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Nithya

17.5.2025 – சனி காஞ்சியில் தேர்

திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் – செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.

இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. திருமங்கையாழ்வாரால் நான்கு பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடையதாகும். வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவை மிகவும் பெயர் பெற்றதாகும். அடுத்து தேர்த் திருவிழா. வரதராஜப் பெருமாள் 100 டன் எடையும் 63 அடி உயரமும் 30 அடி அகலமும் ஐந்து நிலைகளை உடைய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெறும். இதையொட்டி, நேற்று அதிகாலை கொண்டை முடிச்சு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்று, தேரில் எழுந்தருள்வார். காந்திசாலை, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை, பேருந்து நிலையம் வழியாக நான்கு ராஜ வீதிகளில் நடைபெற்ற தேரோட்டம், மீண்டும் நிலையை அடையும்.

18.5.2025 – ஞாயிறு சஷ்டி விரதம்

இந்த சஷ்டி நாளில் முருகப் பெருமானை நினைத்து உபவாசமிருந்து மாலை செவ்வரளி பூக்களால் முருகன் கோயில் சென்று முருகப் பெருமானை வணங்கி கண் குளிர தரிசித்தால், அவர்கள் நினைத்த காரியம் பலிதமாகும். முருகப் பெருமான் செவ்வாய்க்கு உரிய பலன்களான வீடு நிலம் முதலிய யோகங்களைத் தருவார். அதைப் போலவே பெண் களுக்கு நல்ல திருமண வாழ்க்கையைத் தருவார். செவ்வாய் மற்றும் சனி கிரகங் களால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் இன்றைய தினம் இருக்கும் சஷ்டி விரதத்தால் நீங்கும்.

19.5.2025 – திங்கள் சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி

சாத்தூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடாசலபதி திருக்கோயில் உள்ளது. பெருமாள் சாத்தூரப்பன் என்றழைக்கப்படுகிறார். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் விழாவின் ஒவ்வொரு நாளும் கருடவாகனம், சே‌ஷ வாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந் தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று தோளுக்கினியானில் பவனி வருகிறார்.

19.5.2025 – திங்கள் சோம சிரவணம்

இன்று திங்கள் கிழமை. சோம வாரம் என்பார்கள். அதாவது இன்று செய்யப் படும் எந்த விரதமாக இருந்தாலும், காரியமாக இருந்தாலும், நிரந்தரமான உறுதியான பலன் தரும். இந்த சோம வாரத்தில் சஷ்டி திதியும் திரு வோண நட்சத்திரமும் இணைந்து வருகிறது. முருகப் பெருமானுக்கு உரிய திதி சஷ்டி திதி. பெருமாளுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம். இன்றைய தினத்தில் சனி பகவானுக்கு உரிய மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும்போது செய்யப்படும் சஷ்டி விரதமும் திருவோண விரதமும் சிறந்த பலனைத் தரும். சனியால் ஏற்படுகின்ற தொல்லைகள் நீங்கும். காலச்சக்கரத்தின் பத்தாவது கர்ம ராசியான மகர ராசி திருவோண நட்சத்திரத்தை கொண்டிருப்பதால், திருவோண விரதம் நிரந்தர வேலையைப் பெற்றுத் தரும். வேலை தொழில்களில் கௌரவத்தைப் பெற்றுத்தரும். உயர்ந்த பதவியைப் பெற்றுத் தரும்.

திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணா மல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை பருகலாம். பிறகு மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாள் மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

20.5.2025 – செவ்வாய் சதா சிவாஷ்டமி

காலபைரவருக்கும் சிவபெருமானுக்கும் உகந்த திதி தேய்பிறை அஷ்டமி திதி. இந்நாட்களில் காலையில் சிவபெருமானையும், மாலையில் சூரிய அஸ்தமன காலத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு மாதத்தில் வரும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும் ஒரு பெயர் உண்டு. ஒரு பலன் உண்டு. வைகாசி தேய்பிறை அஷ்டமி சதா சிவாஷ்டமியாக கடைப்பிடிககப் படுகிறது. காலபைரவரையும் ஸ்ரீ தட்சிணா மூர்த்தியையும் வணங்க வேண்டிய நல்ல நாள். பைரவர் நவகிரகங்களில் சனியின் குருவாகக் கருதப்படுபவர். எனவேதான் பைரவரை வழிபடுவதன் மூலம் சனியின் சங்கட பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும். இன்றைய தினம் மாலையில் விளக்கேற்றி பைரவரை வழிபடுவதன் மூலம் நோய்கள் நீங்கும் கடன் தொல்லைகள் அகலும்.

20.5.2025 – செவ்வாய் ஸ்ரீ கொப்புடையம்மன் செவ்வாய்ப் பெருந்திருவிழாத் தேரோட்டம்

காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்க்காரர்களின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீகொப்புடையம்மன். நகரின் மையப்பகுதியில் உள்ள அழகிய இந்தக் கோயில் இது சித்திரையின் நிறைவில் துவங்கி, வைகாசியில் நடைபெறும் விழாவுக்கு சென்னையில் வசிக்கும் இந்த ஊர்க்காரர்கள் கூட தவறாமல் வந்துவிடுவார்கள். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறும். விழா நாட்களில் காலை 8:30 மணி, இரவு 9:00 மணிக்கு காமதேனு, அன்னம், கைலாசம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த திருவிழாவின் எட்டாம் நாள் காலையில் அம்பிகையின் தேரோட்டம் நடைபெறும். பனைமரச் சட்டங்களாலான தேர் தையிலான் கொடி கொண்டு கட்டப்படும். பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுப்பார்கள். ஆண்டுதோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால் செவ்வாய்ப் பெருந்திருவிழாத் தேரோட்டம் என்று பெயர்.

23.5.2025 – வெள்ளி ஏகாதசி

இது வைகாசி தேய்பிறை ஏகாதசி. அருமையான சுக்ர வாரத்தில், உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் வருவது சிறப்பு. ரேவதி புதனுக்குரியது. புதன் என்றாலே பெருமாள் தானே. இந்த ஏகாதசி விரதம் பல சிறப்புக்கள் உடையது. ஒருவன் உய்வு பெறுவதற்கு இரண்டு வழிகளைச் சாத் திரம் காட்டுகின்றது. அதில் ஒன்று தவம் செய்வது. இன்னொன்று தானம் செய்வது. தானங்களில் எது உயர்ந்தது என்பது குறித்து பல வரையறைகள் உண்டு. சொர்ண தானத்தையும்விட உயர்ந்த தானம் அன்னதானம். பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் மூவருக்கும் திருப்தி அளிக்கும் ஒரே தானம் அன்னதானம். மற்ற தானத்தில் போதும் என்று சொல்ல மனம் வராது. ஆனால் அன்னதானம் “போதும், போதும்’’ என்று சொல்ல வைக்கும். அப்படிப்பட்ட அன்னதானத்தை மேற் கொள்வதற்கு இணையான பலனை ஏதாவது ஒரு விரதம் நமக்கு கொடுக்கிறதா என்று ஆராய்ந்த பொழுது ‘‘வரூதினீ ஏகாதசி விரதம்’’ அத்தகைய பலனை நமக்கு அருளும். ஒருவன் பிறவிக் கடலை நீந்த வேண்டும் என்றால், அவனுக்கு ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏகாதசியின் பெருமையை ஒருவர் படித்தாலும், யாரையாவது படிக்க வைத்து கேட்டாலும், அவர் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனை அடைந்து விடுவார் என்பது நிச்சயம்.

23.5.2025 – வெள்ளி சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன்

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் வெள்ளிக்கிழமையான இன்று தங்க ப்பாவாடை தரிசனம் தருவார். இன்று ஏகாதசி நாள் என்பதால் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனம் நடைபெறும். உற்சவரான நம்பெருமாள் ஸ்ரீ சந்தன மண்டபத்துக்கு எழுந்தருளி வேத கோஷங்கள் முழங்க திருமஞ்சனம் கண்டருள்வார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi