செறுத்துணை நாயனார் குருபூஜை 31.8.2024 சனி
செறுத்துணை நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண் குடியில் தோன்றியவர் சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். சிவ பூஜைக்கு யார் பழுது செய்தாலும் உடனே கடுமையாக தண்டித்து விடும் வழக்கமுடையவர். திருவாரூர் திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து வந்த காலத்தில் பல்லவ மன்னன் மனைவி, சிவனுக்குரிய பூஜைப் பூக்களை முகர்ந்து பார்த்ததால் வெகுண்ட நாயனார் பட்டத்து ராணியின் மூக்கினை அறுத்தார். வன் தொண்டரான இவருடைய குருபூஜை நாள் ஆவணி மாதம் பூசம்.
திருச்செந்தூர் முருகன் பச்சை சாத்துதல் 31.8.2024 சனி
இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி பெருவிழாவில் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி கோயில் உள் பிராகாரத்தில் உலா வருவார். பச்சை நிறமாக தோற்றமளிக்கும் சண் முகரைப் பார்த்தால் வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். எனவே பச்சை சாத்திக்கு மிகுந்த சிறப்பு. காணக் கண் கோடி வேண்டும்.
புகழ்த் துணை நாயனார் குருபூஜை 1.9.2024 ஞாயிறு
சிவமறையோர் திருக்குலத்தில் உதித்தவர் புகழ்த்துணையார் என்னும் சிவபக்தர். இறைவனுக்கு அன்பால் பூசித்தல், வாயால் அருச்சனை செய்தல், உடம்பால் வழிபாடு செய்தல், போன்ற மனம், வாக்கு, காயம் என்ற மூன்றாலும் இறைவனை வழிபட்டால் அதற்கு நிகர் வேறு சிறந்த தவம் இல்லை என்ற எண்ணம் கொண்டு தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக மழை பொழியாத காரணத்தால், நீர் நிலைகள் வறண்டன. வயல்கள் காட்டாந்தரையாகி, ஆடுகளும், மாடுகளும் தவித்தன. மக்களும் ஊர் விட்டு ஊர் சென்றார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்ற சொல்லுக்கு இணங்க, உறவினர்கள் யாவரும் பிரிந்தனர்.
அவர் வசித்து பூஜைசெய்துவந்த ஊரும் கோயிலுமான செருவில்லிபுத்தூர்(கும்பகோனம் அருகேயுள்ள அழகாபுத்தூர்) மயானமாகத் திகழ்ந்தது. கோயிலுக்குள் செல்பவர்கள் இல்லை. ஆனால் இன்னிலையிலும் புகழ்த்துணையார் மாத்திரம் ஊரைவிட்டுச் செல்லாமல் இருந்தார். அவருக்குத் தாம் வழிபடும் சிவபெருமானை விட்டுச் செல்ல மனம் இல்லை.
அவர் ஒருநாள் சிவபிஷேகத்திற்காக குடத்தில் நீர் கொண்டு வரும் பொழுது, வெகு நாள் பட்டினி கிடந்ததால் சோர்வாகி தளர்ந்து அமர்ந்தார். ஆயினும் சிவா பூஜையை விட மனம் இல்லை. மெல்லச் சிவலிங்கத்தை அடைந்தார். கஷ்டப்பட்டு கையை மேலே உயர்த்தி குடத்திலுள்ள நீரால் திருமஞ்சனம் செய்தார். அவரால் குடத்தைத் தாங்கிப் பிடிக்க முடியவில்லை. தடாலென்று குடத்தைச் சிவலிங்கத்தின் மேலே போட்டுவிட்டு அவரும் மூர்ச்சையானார். கீழே மயங்கிக் கிடந்த அவர் கனவில் சிவபெருமான் எழுந்தருளினார். ‘அன்பனே! உன் தவத்தை வெகுவாக மெச்சினோம்! உயிரை இழப்பதானாலும் நம்மைப் பிரியாமல் இருக்கும் உன் உறுதியைக் கண்டு மகிழ்ந்தோம்! இனி நீ கவலையுற வேண்டாம். ஒவ்வொரு நாளும் காலையில் இந்தப் பீடத்தின் கீழே ஒரு பொற்காசைக் காண்பாய். அதை எடுத்துச் செலவு செய்து உன் உடலைப் பேணிப் பின் நமக்கு வழிபாடு செய்து வருவாயாக!’’ என்று மலர்ந்தருளினார்.
‘‘மயக்கத்திலிருந்து எழுந்த அன்பர் கண்ணைத் துடைத்துக் கொண்டார். எம்பெருமான் திருமுடியின் மேல் குடத்தைப் போட்டுவிட்டோமே” என அங்கலாய்த்து வருந்தினார். தாம் கண்ட கனவைப் பற்றிய நினைவு வந்தது. இறைவன் பீடத்தைப் பார்த்தார். இறைவன் கூறியது போல் அங்கே பள பளவென்று ஒரு பொற்காசு மின்னியது, அந்தக் காசைக் கொண்டு, உணவுப் பொருள்களையும், இறைவன் பூசைக்கு வேண்டிய பொருட்களையும் வாங்கினார். உடலும், உள்ளமும் வலிமை பெற்றார். “எம்பெருமான் துணையிருக்க எனக்கு என்ன கவலை?” என்று பெருமிதம் கொண்டார். தன் தொண்டிலே சிறிதும் குறைவறாது மேன்மேலும் சிறப்பாகப் பூசனை செய்து இறைவன் அருள் பெற்று, இறுதியில் அவனடி சேர்ந்தார். அவர் குரு பூஜை இன்று.
அதிபத்த நாயனார் குருபூஜை 1.9.2024 ஞாயிறு
அதிபத்த நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். நாகப்பட்டினத்தில் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். அதிபத்தர் தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக போற்றுகின்றார்கள்.
இளையான்குடி நாயனார் குருபூஜை 2.9.2024 திங்கள்
இளையான்குடியில் பிறந்த மாறனார், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் கொண்டு திகழ்ந்தார். தம் இல்லத்திற்கு சிவனடியார் வந்தால், எதிரே சென்று கை கூப்பி வணங்கி, வரவேற்று, அவர்களுக்கு உணவளிப்பார். ஒருநாள் நல்ல மழை. உணவின்றிப் பசியால் வாடியபோதும், இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால், கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவில் சிவபெருமான், அடியார் கோலங் கொண்டு கதவைத் தட்டி அழைத்தார். மாறனார் கதவைத் திறந்து, அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்றார். உணவளிக்க வீட்டில் ஏதுமில்லையே என வருத்தம் மிகுந்தது.
பகற்பொழுதில் நிலத்தில் விதைக்கப்பட்ட நெற்மணிகளைச் சேகரித்து வந்து, கீரைகளைப் பறித்து, அடுப்பெரிக்க விறகில்லாமல், வீட்டின் சிதல மடைந்த கூரையிலிருந்த மரக் கட்டைகளைப் பயன்படுத்தி உணவு சமைத்து, மாறனாரும் அவரது துணை வியாரும், சிவனடியாருக்கு உணவு படைத்தனர். அப்பொழுது அடியாராக வந்திருந்த பெருமான், சோதிப் பிழம்பாய் எழுந்து தோன்றினார். அவர் குரு பூஜை நாள் இன்று.
சர்வ அமாவாசை 2.9.2024 திங்கள்
இன்று ஆவணி மாத அமாவாசை. சர்வ அமாவாசை தினம். இரண்டு சுப கிரகங்களின் இணைவு இன்று ஏற்படுகிறது. சூரியனுக்குரிய ஆவணி மாதத்தில் சந்திரனுக்குரிய திங்கள்கிழமை. தர்ப்பணம் கொடுக்கும் நேரத்தில் ஞானகாரகனாகிய மகம் நட்சத்திரம் வந்து விடுகிறது. ஆவணி மாதம் என்பதால், ஐந்தாம் இடமான சிம்ம ராசியில் சூரியன் இருக்க, அதே ராசியில் இருக்கும் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இணைகின்ற அமாவாசை. இன்று மறைந்த முன்னோர்களுக்கு அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதிதிகளுக்கு அன்னமிட வேண்டும். ஏழைகளுக்கு தானம் தர வேண்டும். இதன் மூலமாக நம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்கள் பசியும் தாகமும் தீர்ந்து மகிழ்வோடு ஆசிர்வதிப்பார்கள்.
கல்கி ஜெயந்தி 3.9.2024 செவ்வாய்
யுகங்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. கிருத யுகத்திற்கு 17,28,600 ஆண்டுகள். திரேதாயுகத்திற்கு 92,96,000 ஆண்டுகள். துவாபர யுகத்திற்கு 8,64,000 ஆண்டுகள். கலியுகத்திற்கு 4,32,000 ஆண்டுகள் என வகுக்கப்பட்டுள்ளது. இவை நான்கும் சேர்ந்தது சதுர் யுகம்.
மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தார். ஒவ்வொரு யுகங்களிலும் இந்த அவதாரங்கள் உண்டு. அதில் பத்தாவது அவதாரம் கல்கி அவதாரம். பல சதுர்யுகங்கள் உள்ளதால், ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றுவதற்காக கல்கி, பல முறை அவதாரம் எடுத்து உள்ளார். அந்த கல்கி ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
இது ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. கல்கி ஜெயந்தி அன்று காலையில் எழுந்து புனித நீர் ஆட வேண்டும். திருமால் ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்முடைய பாவ கர்மங்களை நீக்கி புண்ணியங்கள் தரும்படி பிரார்த்தனைகள் செய்ய வேண்டும். அதர்மம் மிஞ்சுகின்ற பொழுது தோன்றுகின்ற அவதாரம் என்பதினால் எக்காரணத்தை முன்னிட்டும் அதர்மம் செய்யாமல் இருக்க வேண்டும். அன்றைக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை முதலியவைகளை பாராயணம் செய்யலாம். ‘‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’’ என்கின்ற மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
மதுரை சோம சுந்தரர் நாரைக்கு முத்தி அளித்தல் 6.9.2024 வெள்ளி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா நடைபெற்று வருகிறது. ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள் ஆட்சி புரிபவர். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திரு விழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். அதில் இன்று நாரைக்கு முத்தி கொடுத்த லீலை நடைபெறுகிறது. பாண்டிய நாட்டில் தாமரைக் குளமொன்றில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. வறட்சி காரணமாக குளம் வற்றியதால் நாரை அக்குளத்தை விட்டு நீங்கி காட்டுப் பகுதி ஒன்றில் இருந்த குளக்கரையில் வாழ்ந்து வந்தது. அக்குளத்தில் முனிவர்கள் வந்து முழுகிச் செல்வர்.
முனிவர்கள் முழுகும் போது மீன்கள் அவர்களது சடையிலும் தோளிலும் புரள்வதை நாரை கண்டது. முனிவர்களைத் தொட்டதால் புனிதமடைந்த மீன்களைப் புசிப்பதில்லை என உண்பதையே நிறுத்தியிருந்தது. அக்குளத்தில் மூழ்கிய முனிவர்கள் கரையேறிய பின் வாசித்த மதுரைப் புராணமும், சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடல் புராணமும் அந்நாரையின் காதுகளில் கேட்டன. நாரை அறியாமை நீங்கி மெய்யறிவு பெற்றது. மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி 15 நாட்கள் இடை யறாது இறைவனைத் தியானித்தது. இறைவன் அந்நாரையின் முன் தோன்றி முத்தி அளித்தார். அந்த லீலை இன்று.
விருதுநகர் சொக்கலிங்கர் உற்சவ ஆரம்பம் 6.9.2024 வெள்ளி
விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா தொடங்குகிறது. திருவிழாவினை முன்னிட்டு தினமும் அன்னம், குதிரை, யானை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி
எழுந்தருளி அருள்பாலிப்பார்.
31.8.2024 சனிக்கிழமை சனி மகா பிரதோஷம்.
1.9.2024 ஞாயிற்றுக்கிழமை மாத சிவராத்திரி.
1.9.2024 ஞாயிற்றுக்கிழமை ஆவணி ஞாயிறு நாக பூஜை செய்ய நன்று.
2.9.2024 திங்கட்கிழமை திருச்செந்தூர் தேர்.
3.9.2024 செவ்வாய்க்கிழமை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி வாகனம் மாலை கஜமுகன் சூரசம்காரம்.
4.9.2024 புதன்கிழமை மறைஞானசம்பந்தர் குருபூஜை.
4.9.2024 புதன்கிழமை திருக்கடிகை லட்சுமி நரசிம்மர் உற்சவம்.
4.9.2024 புதன்கிழமை திருவாரூர் மடப்புரம் குரு தட்சணாமூர்த்தி.