சனி மகா பிரதோஷம் 17.8.2024 சனி
பிரதோஷம் எந்த நாளில் வந்தாலும் சிறப்புதான் என்றாலும் சனிக்கிழமை வருவது பெரும் சிறப்பு. மகா சனி பிரதோஷம் கோடி கோடி புண்ணியம் தரும். பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. ஒரு சனி மகா பிரதோஷத்தன்று விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் 5 ஆண்டுகள் சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்ட பலனைப் பெறமுடியும். சனிப் பிரதோஷத் தன்று சிவபெருமானையும், சனீஸ்வரனையும் விரதம் இருந்து வழிபட்டால் கிரகதோஷங்கள், சனியால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கிவிடும். பிரதோஷ நாள்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும். இந்த நாளில் நந்திக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதை தரிசனம் செய்து நந்தியின் கொம்புகளின் வழியாக சிவபெருமானை தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்குவதோடு வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திருக்கோட்டியூர் பவித்ரோத்சவம் 17.8.2024 சனி
திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள்கோயில், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங் களில் ஒன்று. மூலவர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி. சுவாமி
யுடன் ஸ்ரீ தேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மதேவன், சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். மகாவிஷ்ணு இரணியனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படு கிறது. இத்திருத்தலத்தில் பவித்ரோத்சவம் நடைபெறுகிறது. பவித்ரோத்சவம் என்பது புனிதப்படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். ஒவ்வொரு திருக்கோயில்களும் ஆண்டுதோறும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் பவித்ரோத்ஸவம் 3 அல்லது 5 அல்லது 7 அல்லது 9 நாட்களுக்குக் கொண்டாடப்படும்.
திருவாவடுதுறை ருத்ராபிஷேகம்17.8.2024 சனி
மயிலாடுதுறை-கும்பகோணம் பாதையில் குத்தாலம் அருகே உள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோமுக்தீஸ்வரர் கோயிலில் மாசிலா மணியீஸ்வரர், ஒப்பிலா முலையம்மைக்கு ஆவணி மாதப் பிறப்பன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ருத்ராபிஷேகம் நடைபெறும். இது இந்த தலத்தில் விசேஷமானது. ஸ்ரீ ருத்ர மந்திரத்தால் யாகங்களைச் செய்து கலசத்தில் உள்ள நீரை உருவேற்றி அந்த நீரால் சிவனை அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம் ஆகும்.
விஷ்ணுபதி புண்ணிய காலம் 17.8.2024 சனி
ஆவணி மாதப் பிறப்பு நாளாகிய இந்த நாளை விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பார்கள். சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒரு ராசியில் நுழைவார். அதை வைத்துத்தான் மாதங்கள் சொல்லப்படுகின்றன. சூரியன் மேஷ ராசியில் நுழைந்தால் சித்திரை மாதம். ரிஷப ராசியில் நுழைந்தால் வைகாசி மாதம். இன்று சூரியன் தனக்குரிய சிம்ம ராசியில் நுழைகிறார். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய மாதத்தின் முதல் நாளே விஷ்ணுபதி புண்ணிய காலம். விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் முன்னோர்கள் வழிபாடு, திதி கொடுப்பது, குலதெய்வ வழிபாடு மற்றும் தானம் தர்மம் செய்வது மிகுந்த புண்ணிய பலன் அளிக்கும்.
சூரியனார் கோயில் மகா அபிஷேகம் 18.8.2024 ஞாயிறு
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில், உஷாதேவி, சாயாதேவியர்களுடன் சிவசூரியபெருமான் அருள் பாலிக்கிறார். ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை, 10 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்து. தொடர்ந்து தனி மண்டபத்தில் உஷாதேவி, சாயாதேவி உடனாய சூரியபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும். பின் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு புஷ்பலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
சூரியனார் கோயிலை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்
அ) களத்திர தோஷத்தின் தீய விளைவுகளை குறைக்கிறது
ஆ) நல்ல தொழில் மற்றும் கல்வி
இ) புத்திர தோஷத்தை நீக்குகிறது
ஈ) திருமணத் தடையை நீக்குகிறது.
நடராஜர் அபிஷேகம் 18.8.2024 ஞாயிறு
வருடத்திற்கு நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களும் மகா அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, ஆருத்ரா அபிஷேகம் என்ற ஆறு அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் என்பது ஆருத்ரா தரிசனம் மற்றும் மாசி சதுர்த்தசி என்று நடத்தப்படும். இவை ஆறுமே மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அதில் ஒன்று இன்று கண்ணாடிப்பெறுகிறது. ஆவணி
சதுர்த்தசி.
ஆவணி முதல் ஞாயிறு 18.8.2024 ஞாயிறு
ஆவணி மாதங்களில் ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பானது. காலையில் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் வைத்து படைப்பார்கள். அதோடு ஆண்டு புற்று மாரியம்மனுக்கு பால் வைத்து வணங்கும் வழக்கமும் உண்டு. இதன் மூலம் நாக தோஷங்கள் நீங்கி வாழ்க்கை
வளம் பெறும்.
ஆவணி அவிட்டம் 19.8.2024 திங்கள்
தெய்வங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பண்டிகை மாதம்தோறும் வருகின்றன என்றால், வேதத்துக்கு உண்டான பண்டிகை ஆவணி அவிட்டமே என்பார்கள் பெரியோர்கள். ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கினை உபநயனம் செய்து கொண்ட பிராமணர் விஸ்வகர்மா மற்றும் சில பிரிவினர்கள் அனுசரிக்கிறார்கள். இது ஆவணி மாதம் அவிட்டம் (பெரும்பாலும் பௌர்ணமி) கடைபிடிக்கும் வழிபாடாகும். வடமொழியில் இது உபாகர்மா என வழங்கப்
படுகிறது. இதன் பொருள் தொடக்கம் என்பதாகும். இன்றைய தினம் வேதங்களைப் படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம். இன்று ரட்ஷாபந்தனம் செய்யும் நாளாகும்.
நாராயண குரு ஜெயந்தி 20.8.2024 செவ்வாய்
கேரளத்தின் மறுமலர்ச்சித் தந்தை எனப் போற்றப்பட்டவர். சிறந்த கல்வியாளர். நாராயண குரு கேரள மாநிலம் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தார் (1856). பிறந்த ஊரிலேயே கல்வி கற்றார். அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். ஆன்மிகத்தில் நாட்டம் பிறந்தது. 23-வது வயதில் ஊரைவிட்டு வெளியேறி, தமிழ்நாட்டுக்கு வந்து துறவு பூண்டார். வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மந்திரங்கள், பவுத்த, சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள், இந்திய, வெளிநாட்டு தத்துவங்கள் ஆகியவற்றை கற்று நிபுணத்துவம் பெற்றார்.1888-ல் அருவிக்கரை என்ற சிற்றூரில் குருகுலம் நிறுவினார். ஏழை, அநாதைக் குழந்தைகளுக்குப் பல இடங்களில் பள்ளிகளை நிறுவினார். ஏராளமான சீடர்கள் இவரை நாடி வந்தனர். தன் சீடர்களை ஒன்று சேர்த்து ‘தர்ம சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். 1913-ல் அத்வைத ஆசிரமம் தொடங்கினார். ஆன்மிகவாதி, சமூக சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர், கல்வியாளர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் மிளிர்ந்தார். 1897-ல் மலையாளத்தில் இவர் இயற்றிய ‘ஆத்மோபதேச சதகம்’ சிறந்த இலக்கியமாகவும், இவரது தலைசிறந்த தத்துவ நூலாகவும் போற்றப்பட்டது. இவரது சீர்திருத்த கொள்கைகளின் விளைவாக உருவானதுதான் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபை. மகாத்மா காந்தி இவரை ‘அவதார புருஷர்’ எனப் போற்றினார். சிறந்த தத்துவஞானியான நாராயண குரு 1928-ம் ஆண்டு தனது 72-வது வயதில் மகா சமாதி அடைந்தார். அவர் பிறந்த நாள் இன்று.
மகா சங்கடஹர சதுர்த்தி 22.8.2024 வியாழன்
மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். இது விநாயகர் அவதரித்த ஆவணி மாதத்தில் வரும் போது அதை மஹா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அதாவது விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தியையே நாம் மகாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். சதுர்த்தி தினத்தில் சந்திரனை ஆட்டிப் படைத்தவர் விநாயகப் பெருமான். எனவே சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது. மனம் தெளிவடையும். செயல்கள் வெற்றி பெரும். நினைத்த காரியங்கள் அனுகூலமாகும். ஓராண்டு முழுவதும் வரும் 11 சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் இந்த மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது விசேஷம். அவ்வாறு விரதம் இருந்தாலோ மாலையில் விநாயகரை வழிபட்டாலோ ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி நாளில் சந்திர உதய நேரத்தில் விநாயகப் பெருமானை வழிபட்டு, பின்பு சந்திர தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கும். வாழ்வில் சங்கடங்கள் தீரும்.
சுந்தரானந்தர் சித்தர் குரு பூஜை 23.8.2024 வெள்ளி
தமிழ் சித்தர் மரபில் பதினெண் சித்தர்களுள் ஒருவர் சுந்தரானந்தர். இவர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடைய மதுரையம்பதியில் சுந்தரானந்தர் சித்தர் வாழ்ந்து, சித்துகள் பல புரிந்து முக்தியடைந்தார். கிஷ் கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், சட்டைமுனி சித்தரின் சீடர் என்றும் அறியப்பட்டவர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை வாங்கி, சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். தன் அழகான தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக உண்டான சுந்தரானந்தர் என்கிற பெயர் மட்டுமல்ல சித்தருக்கு வல்லப சித்தர் என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. இவர் பதின் மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் பல கணிப்புகளையும் எழுதி வைத்து சென்றுள்ளார். சுந்தரனார் ஏராளமான நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் முக்கியமான நூல்கள் சோதிட காவியம், வைத்தியத் திரட்டு, தண்டகம், முப்பு, சிவயோக ஞானம், அதிசய காராணம், பூசா விதி, தீட்சா விதி, சுத்த ஞானம், கேசரி, வாக்கிய சூத்திரம், காவியம், விச நிவாரணி ஆகியவை ஆகும். இவை அனைத்தும் நமக்கு நலமான சுகமான வாழ்க்கை தர உதவும் பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம். மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயிலில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா, பழைய திருக்கல்யாண மண்டபத்தில்நடைபெறும். அப்போது சுந்தரானந்த சித்தருக்கு திருமுறை பாராயணம், புஷ்பாஞ்சலி நடக்கும்.
18.8.2024- ஞாயிற்றுக்கிழமை திருவோணம்.
18.8.2024- ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு.
19.8.2024- திங்கட்கிழமை பௌர்ணமி.
20.8.2024- செவ்வாய்க்கிழமை காயத்ரி ஜெபம்.
21.8.2024- புதன்கிழமை ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் ஆராதனை.
21.8.2024- புதன்கிழமை திருத்தணி முருகனுக்கு அபிஷேகம்.
21.8.2024- புதன்கிழமை திருப்பதி சகஸ்ர கலச அபிஷேகம்.
22.8.2024- வியாழக்கிழமை திருப்பதி புஷ்பாங்கி சேவை.
23.8.2024 வெள்ளிக்கிழமை தேவகோட்டை ரங்கநாதர் உற்சவம்.
23.8.2024 வெள்ளிக்கிழமை திருமாலின் சோலை ஸ்ரீ கள்ளழகர்
சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
விஷ்ணுபிரியா