பெரியாழ்வார். என்ன ஒரு அற்புதமான பெயர்! வேறு எந்த ஆழ்வாருக்கும் கிடைக்காத இந்தப் பெயர் இவருக்கு எப்படிக் கிடைத்தது?
அதற்கு ஒரே வரியிலே பெரியவர்கள் பதில் சொல்லி விட்டார்கள். வேறு ஆழ்வார்களுக்கு இல்லாத பரிவு இவருக்கு இருந்ததால் பட்டர் பிரான், விஷ்ணு சித்தர் என்கின்ற பெயர் பெரியாழ்வார் என்னும் பெயராக மாறி நிலைத்தது. எல்லா ஆழ்வார்களுக்கும் தானே பரிவு? அதில் என்ன இவருக்கு ஒரு சிறப்பு இருக்க முடியும்? என்ற கேள்வி எழும். அதற்கு அருமையான விளக்கம் அளித்தார்கள், பெரியவர்கள்.
99 மதிப்பெண் எடுத்தவர் உயர்ந்த நிலையில் கொண்டாடப்படுவர். ஆனால், அதைவிட ஒரு மதிப்பெண் கூடுதலாக நூற்றுக்கு நூறு வாங்கியவருக்கு அதைவிட ஒரு சிறப்பு உண்டு அல்லவா.
எல்லா ஆழ்வார்களுக்கும் எம்பெருமான் மீது பரிவுதான். கொண்டாட்டம்தான். மங்கல வாழ்த்துக்களால் அவனை வாயாரப் பாடியவர்கள்தான்.
ஆனால், பெரியாழ்வாருக்கு இந்தப் பரிவு சற்று கூடுதலாக இருந்தது.அடுப்பில் பால் வைத்தால் சூடு பொறுக்காமல் பொங்குகிறதே, அதைப்போல இவருடைய மனதில் அன்பு எனும் பால் பொங்கியது. மற்ற ஆழ்வார்களுக்கு, எம்பெருமானுடைய மேன்மையிலும் மற்ற பிற குணங்களிலும் ஆழங்கால் பட்டு பாசுரம் பாடிக் கொண்டிருந்த பொழுது, ஒரு தாய் தன் குழந்தையை நினைத்து பாசத்தால் பொங்குவதுபோல, அன்பால் பொங்கினார். அந்தத் தாய்மை குணம் விஞ்சி நின்றதால் இவருக்கு பெரியாழ்வார் என்னும் பெயர்.
இவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி.மதுரை பாண்டியன் அவையிலே யார் பரத்துவம் என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் இருந்தது.பலரும் முயன்றனர். இவர் இறைவன் ஆணைக்கு இணங்க நிரூபித்து விட்டார். அவையில் கூடியிருந்த அத்தனை புலவர்களுக்கும் மறு மொழி தந்தார். ஐயம் திரிபற அவர்கள் கேட்ட கேள்விகளுக் கெல்லாம் பதில் சொன்னார்.பரிசுக்காகக் கட்டி வைத்திருந்த பொற்கிழி தானே ஆழ்வார் மடிமீது விழுந்தது.எல்லோரும் செல்வத்தை இரு கையால் பற்றிக் கொள்வர். ஆனால், அந்தச் செல்வமே இவரை பற்றிக் கொண்டது.
மன்னன் மகிழ்ந்தான். மக்கள் மகிழ்ந்தனர். தன்னை திறம்பட வெளிப்படுத்திய ஞானத்தைக் கண்டு எம்பெருமானும் மகிழ்ந்தான்.வைணவ சமய நெறியில் ஒரு அற்புதமான விஷயம் சொல்லப்படும்.நீங்கள் ஆண்டவனைப் பார்ப்பது என்பது இருக்கட்டும். உங்கள் செயல் அவனுக்கு உகப்பாய் இருந்தால் அவன் உங்களைப் பார்க்க விரும்புவான். இது பெரியாழ்வார் விஷயத்தில் உண்மையாகியது.
ஒரு பெரிய மைதானத்தில் யானையின் மீது ஆழ்வாரை உட்கார வைத்து, இருபுறமும் கவரி வீச, விழா எடுத்தான், பாண்டிய மன்னன். இந்த விழாவைக் காண எல்லோரும் ஆசைப்பட்டு கூடல் நகரத்தில் கூடினர்.பகவானும் ஆசைப்பட்டான்.வைகுந்தத்தில் கருடனை விளித்து, ‘‘கருடா, நம் விஷ்ணு சித்தருக்கு விரிவான விழாவை பாண்டியன் கொண்டாடுகிறான். அதைக் காணுவதற்குப் புறப்பட வேண்டும். தயாராக இரு” என்றான்.பக்கத்தில் இருந்த தேவிமார்கள், ‘‘நீங்கள் மட்டும் போனால் எப்படி? நம்முடைய பிள்ளையின் விழாவைக் காண நாங்களும் வருவோம்” என்று கேட்க, எம்பெருமான் கருடன் மீதேறி வந்து, ஆழ்வாருக்குக் காட்சி தந்தான்.
இப்படி ஆழ்வாருக்குக் கூடல் மாநகரில் எம்பெருமான் காட்சி தந்த இடம் “மெய் காட்டும் பொட்டல்” என்று வழங்கப்படுகிறது. இப்பொழுதும் ஆண்டுதோறும் கூடலழகர் ஆலயத்திற்கு அருகே இந்த வைபவம் நடைபெறுகிறது.
ஆழ்வார் பகவானைப் பார்க்கிறார். பகவான் ஆழ்வாரைப் பார்க்கிறான். பகவானுக்கு ஆனந்தமோ ஆனந்தம். அந்த ஆனந்தம் அவனுடைய அழகை இன்னும் கூட்டுகிறது. ஒரு நொடி எம்பெருமானுடைய ஒளிமயமான ஆனந்த மயமான அற்புத வடிவழகைச் சேவித்த ஆழ்வார், அடுத்த கணம் யானையின் கழுத்தில் இருந்த மணியை எடுத்து, அவனுக்குத் தமிழால் பாசுரம் பாடிக் காப்பிடுகின்றார்.
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
பல்லாண்டு என்று தொடங்கும் இந்தக் காப்பு தான் மங்கல வாழ்த்துகளுக்கு எல்லாம் மகத்தான மணிமகுடமாகக் கொண்டாடப்படுகிறது.அழகான குழந்தையை தாய் பார்த்து அனுபவிப்பாள். ஆனால், அதே தாய்க்கு ஒரு அச்சமும் வந்துவிடும். “ஐயோ, இந்த குழந்தை இவ்வளவு அழகாக இருக்கிறதே, என்னுடைய கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறதே, என்னுடைய கண்ணே பட்டுவிடும் படி இருந்தால், மற்றவர் கண் எச்சில் இந்தக் குழந்தைக்குச் சங்கடத்தைத் தருமே” என்று நினைப்பாள்.
மனம் பதைப்ப, கருப்பு மை இட்டு, சுற்றிப்போட்டு கண் எச்சிலைக் கழிப்பாள்.இவைகள் எல்லாம் சடங்குகளாக இருக்கலாம். ஆனால் இவற்றின் இடையே இருப்பது பரிவு. விஞ்சிய பரிவு.
அந்த விஞ்சிய பரிவு தாய்மை உணர்வு கொண்ட ஆழ்வாரிடம் இருந்து தமிழ்ப் பாசுரமாக விரிந்து மங்கல வாழ்த்து செய்ததால், இவருடைய விஷ்ணு சித்தர் என்ற பெயர் மாறி பெரியாழ்வார் என்ற பெயர் நிலைத்தது.இதை மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலை என்ற பாசுரத்தில் உணர்ச்சிகரமாக எடுத்துரைக்கிறார்.
மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி – பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
எல்லா ஆழ்வார்களுக்கும் பரிவு தான். எல்லா ஆழ்வார்களுக்கும் எம்பெருமானைத் துதிப்பதில் ஆர்வம் தான். ஆனால் இவருக்கு இவர் அறியாமலேயே அந்தப் பரிவு விஞ்சி வெளிப்பட்டதால் வில்லிபுத்தூர் பட்டர்பிரான் என்ற திருநாமம் பெரியாழ்வார் என்கிற பெயராக மலர்ந்தது. இன்றளவும் நிலைத்தது.அந்தப் பெரியாழ்வார் அவதார உற்ஸவம் பத்து நாள் திருவிழாவாக அவர் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்திலே, ஆனி மாதம் ஜோதி நட்சத்திரம் என்று சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி கொண்டாடப்படுகிறது.
தாய்மை உணர்வு கொண்ட ஆழ்வார் அவதார இடம் என்பதால் பூமித்தாயே ஆழ்வாருக்கு திருமகளாய் அவதரித்தார். இன்னொரு விசேஷம். 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமை உடையது ஸ்ரீவில்லிபுத்தூர்.
தந்தையும் மகளும் என இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமையுடையது.அதுவும் ஆனி, ஆடி என அடுத்தடுத்த மாதங்களில் அவதரித்த பெருமை உடையது. முதலில் வருவது ஆனி மாதம் என்பதால் திருத்தந்தையாக பெரியாழ்வாரும், அடுத்த மாதம் ஆடி என்பதால் திருமகளான ஆண்டாள் நாச்சியாரும் அவதரித்த பெருமை உடையது. அதனால் பகவானே இவர்களுக்குப் பின்னால்தான் நான் என்று காட்டுவது போல ஆவணி மாதத்திலே தன் அவதாரத்தை எடுத்துக்கொண்டார்.
தாய்மை உணர்வு விஞ்சியதால், பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக்கி, தான் தாயாகி, கன்னித்தமிழில் அவருக்குப் பிள்ளைத்தமிழ் பாடினார். பின்னால் தமிழில் எத்தனையோ பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டாலும் பெரியாழ்வாரின் பிள்ளைத் தமிழுக்கு சீரும் சிறப்பும் வந்தது.
என்ன சிறப்பு என்று கேட்கலாம்?
இன்றைக்கும் இந்தப் பிள்ளைத்தமிழ் எல்லா திருமால் ஆலயங்களிலும், திருமால் அடியார் இல்லங்களிலும், ஓதப்படும் சிறப் பைப் பெற்றது. இந்தச் சிறப்பு மற்ற பிள்ளைத் தமிழ் நூல்களுக்கு இல்லை அல்லவா?
எந்தப் பாசுரம் தொடங்கும் போதும், பிரணவத்தைப்போல, திருப்பல்லாண்டு ஓதப்படுகிறது.சரி திருமஞ்சன காலம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே மற்ற ஆழ்வார்கள்
பாசுரங்கள் எல்லாம் பிறகுதான்.பெரியாழ்வாரின் நீராட்ட பாசுரம் கம்பீரமாக ஒலிக்கும்.
வெண்ணெ யளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத்
தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு
இங்குஎத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே.
நாரணா நீராட வாராய்.
சரி அடுத்து பெருமாளுக்குப் பூச்சூடல்.இதோ பெரியாழ்வார் பாசுரம். ஒவ்வொரு பாசுரமாகச் சொல்லிச் பூச்சூட்டுவார்கள்.
ஆனிரை மேய்க்க நீ போதி அருமருந் தாவதறியாய்
கானக மெல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப
தேனி லினிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்.
மாலையாகி விட்டது. திருக் காப்பிடல் செய்யவேண்டும். அங்கும் பெரியாழ்வார் தான்.
இந்திர னோடு பிரமன் ஈசன் இமைய வரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது வாகும் அழகனே காப்பிட வாராய்.
கடைசி பூஜை அர்த்தஜாம பூஜை. சுவாமிக்கு பால் நிவேதனம் செய்து, பள்ளியறைப் பாசுரம் பாட வேண்டுமே. ஊஞ்சலில் போட்டுத் தாலாட்ட வேண்டுமே. தமிழ் கேட்டால் தானே அந்த தலைவனுக்கு கூட தூக்கம் வரும்.
அதற்கும் பெரியாழ்வார் தான் வருவார்.
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!
சரி எல்லாம் முடிந்துவிட்டது. பட்டர் சந்நதி கதவை அடைத்து விட்டு கோயிலுக்கு வெளியே வர வேண்டும்.நம்மையெல்லாம் காக்கின்ற இறைவனுக்குப் பாதுகாப்பு வேண்டும் அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், என்ற பரிவால் ஏற்படும் பாச உணர்வு.இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்று நினைப்பது ஞான பாவம்.இறைவனை நாம் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது பிரேம பாவம்.ஞானபாவ முதிர்ச்சிதான் பிரேம பாவம் என்று சொன்னார்களே தவிர பிரேம பாவத்தின் முதிர்ச்சி ஞான பாவம் என்று சொல்ல மாட்டார்கள்.அளவுக்கு விஞ்சிய பிரேம பாவம் வந்து விட்டால் அவனை விஞ்சிய பாகவதன் கிடையாது. பக்தனும் கிடையாது.
இதைத்தான், ஸ்ரீமத் பாகவதத்தில் கோபியர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். அப்படி எளிமையானவர்கள் வாழும் இடம் தான் பகவானுக்கு பிருந்தாவனம் ஆகியது. அதனால்தான் ஆண்டாள் கண்ணன் பிருந்தாவனத்தில் இருக்கிறான் என்று கண்டு பிருந்தாவனத்தில் கண்டோமே என்று பாசுரம் விடுகிறாள்.
ராமாயணத்தில் ஒரு காட்சி. குகனைத் தேடி ராம லட்சுமணர்கள் சீதையோடு வந்து விட்டார்கள். குசலம் விசாரித்து முடித்து அவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்துவிட்டு, குகன் தன் சேனைகளோடு நிற்கிறான். ராமபிரான் சீதையோடு உறங்குவதற்கு செல்லுகின்றான்.
ஒரு துளி கூட உறக்கம் இல்லாத லட்சுமணன், வில்லும் அம்புமாக இரவு முழுவதும் காவல் காக்கிறான்.அவன்தான் காவல் இருக்கிறானே, குகன் தன்னுடைய பரிவாரங்களோடு போய் வேறு வேலைகளைப் பார்க்கலாமே?தம்பி பரதனை முன்னிட்டுக் கொண்டு ராமனை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்று கேட்டதிலிருந்து தன்னுடைய தலைவனான ராமனுக்கு, அயோத்தி படைகளாலோ, அல்லது வேறு ஏதாவது ஒருவராலோ ஆபத்து வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைக்கின்றான்.
அவன் அங்கே ராமனோடு துணைக்கு வந்த லட்சுமணனைக் கூட நம்புவதற்கு தயாராக இல்லை.ஏன், தன்னுடைய படைவீரர்களைக் கூட அவன் நம்புவதற்குத் தயாராக இல்லை.அதனால் தானே இரவு முழுக்க பல்வேறு ஆயுதங்களோடு காவல் காத்தான் என்று வரும்.இந்த இடத்திலே உரையாசிரியர்கள் நுட்பமான ஒரு விஷயத்தை சொல்வார்கள்.இவர்கள் எம்பெருமானைக் காப்பதாக நினைத்துக்கொண்டு காவல் இருக்கின்றார்கள். உண்மையில் எம்பெருமான் இவர் களுக்கு ஏதாவது வந்து விடுமே என்று காவல் காத்துக் கொண் டிருக்கிறான். அது இவர்களுக்குப் புரியவில்லை. புரியாததற்குக் காரணம் ஞானக் குறைவு அல்ல, பரிவின் நிறைவு என்பார்கள்.
இந்த நிறைவு பெரியாழ்வாரிடம் இருந்ததால், பெருமாளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார்.ஒரு குழந்தை கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது, விழுந்து விடுமோ, பூச்சிகள் கடிக்குமோ என்று ஒரு தாய் தூங் காமல் அந்தக் கட்டிலின் மீதும், குழந்தையின் மீதும் கண் வைத் திருப்பது போல பெரியாழ்வார் இருக்கிறார். அந்த பரிவு நிலை பாசுரமாக வெளிப்படுகிறது.
சக்கரத்தாழ்வாரே கவனம்! சங்காழ்வாரே கவனம்! நாந்தகம் என்னும் வாளே, ஜாக்கிரதை! சார்ங்கம் என்னும் வில்லே கவனம்! கௌமோதகி என்கிற கதையே,கவனம்! இந்திரன் அக்னி, எமன், நைருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானனன் எனும் அஷ்டதிக்குப் பாலகர்களே!அதிக கவனம்! எப்பொழுதும் கூடவே இருக்கக்கூடிய அனந்தனே, பகவான்படுத்துக் கொண்டிருக்கிறான் கவனம்! வேத வித்தகனான கருடனே! பகவான் பள்ளி கொண்டிருக்கிறான் கவனம்.
உங்கள் கவனம் எல்லாம் நீங்கள் இந்தப் பள்ளி அறையைக் கவனமாகப் பாதுகாத்து வாருங்கள்.
இப்படி ஏதாவது ஒரு தமிழ் பாசுரம் இருக்கிறதா என்றால் இல்லை. இந்தப் பாசுரம் தான் ஒவ்வொருவரும் இரவில் தங்கள் பூஜை அறையில் திருத்தாள் இடும் போதும், கோயில் சந்நதியில் எல்லாம் முடித்து திருத்தாள் இடும் போதும் பாடுவார்கள்.
உறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே
அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள்
பறவை யரையா உறகல் பள்ளி யறைக்குறிக் கொண்மின்.
உறகல்… உறகல்… உறகல்… என்று மூன்று தரம் ஆணையிட்டு பேசு கின்றார்.. உறங்காது இருங்கள், உறங்காது இருங்கள், உறங்காது இருங்கள் என்பது இதன் பொருள்.
பெரியாழ்வார் என்ற பெயருக்கு, இதைவிடச் சிறந்த பாசுரத்தைச் சான்றாக எடுத்துக்காட்ட முடியுமா என்ன?.
முனைவர் ஸ்ரீராம்